×

அம்பத்தூர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் குவிந்த குப்பை கழிவுகள்: அதிகாரிகள் அலட்சியம்

அம்பத்தூர்: அம்பத்தூர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் அவதிப்படுகின்றனர். இவற்றை அகற்றுவதில் பொதுப்பணி துறை அலட்சியம் காட்டி வருகிறது. சென்னை அம்பத்தூர்-அயப்பாககம் சாலையில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவிலான அம்பத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நிறைந்து உபரிநீர் கால்வாய் மூலம் அம்பத்தூர் பகுதிகளான எம்கேபி நகர், ஆசிரியர் காலனி, ராமாபுரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், கொரட்டூர் வழியாக கூவம் ஆற்றில் கலக்கிறது.

ஆரம்ப காலத்தில் இக்கால்வாயில் மழைநீர் மட்டுமே சென்றது. நாளடைவில் அப்பகுதி வீடுகள், கம்பெனிகளின் கழிவுநீர் திறந்துவிடப்பட்டது. மேலும், பல இடங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கம்பெனிகளின் கழிவுகள் உபரிநீர் கால்வாயில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இந்த உபரிநீர் கால்வாய் நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி, தற்போது பல்வேறு இடங்களில் சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தின்போது மழைநீர் செல்ல வழியின்றி, அப்பகுதி சாலைகளில் கழிவுநீருடன் பல நாட்களுக்கு தேங்கி கிடக்கின்றன.

இதையடுத்து அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் மர்ம காய்ச்சல்களும் ஏற்படுகின்றன. அவர்கள் சிகிச்சை பெற, நீண்ட தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். இவற்றை அகற்றுவதில் பொதுப்பணி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே, அம்பத்தூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் கழிவுகளை அகற்றி சீரமைக்கவும், அவற்றை தடுக்கவும், மழைக் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும் மாவட்ட கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Ambattur lake, garbage, officials negligence
× RELATED 2 ஒன்றிய அமைச்சர், துணை முதல்வர், எம்பி,...