×

கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113-ஆக உயர்வு: மாநில அரசு தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கடந்த 8-ந் தேதி முதல் பெய்த பலத்த மழையால் 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், மண்சரிவும் ஏற்பட்டது. மழை சற்று குறைந்த நிலையில் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த வாரம் இது சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த இருதினங்களாக அங்கு மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

மலப்புரத்தின் கவலப்பாரா மற்றும் வயநாட்டின் புத்தமலா கிராமங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. அங்கு, மீட்புப் படையினர் தொடர்ந்து, பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில், மழை நின்று, வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. அதையடுத்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். அந்த மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களில் நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே மழை, வெள்ளத்தால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 29 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறியுள்ளது. 2-ம் கட்ட கணக்கெடுப்பின் படி 1,186 வீடுகள் முழுமையாகவும், 12,761 வீடுகள் பகுதியளவு சேதமாகின எனவும் குறிப்பிட்டுள்ளது.


Tags : Rain, Flood, Kerala Govt
× RELATED நெல்லை - தென்காசி இடையே நான்கு...