×

‘லாக்கப்பில் ரத்த வாந்தி’ விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் போலீஸ் வாகனத்தில் மர்ம சாவு: நெல்லையில் பரபரப்பு

வள்ளியூர்: மகளிர் காவல்நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயர்மேனாக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் மீது சிறுமியை சில்மிஷம் செய்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. இவரை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் தேடிவந்த நிலையில் தலைமறைவானார். ஆனால் கருங்கல்லைச் சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் வீட்டில் கிறிஸ்டோபர் பதுங்கியிருப்பதை அவரது செல்போன் டவர் காட்டியது.

இதையடுத்து அந்த பெண் யார்? என்று மகளிர் போலீசார் விசாரித்ததில் அவர் லீலாபாய் (45) என்பது தெரியவந்தது. கிறிஸ்டோபரை கைது செய்ய கருங்கல்லில் உள்ள லீலாபாய் வீட்டிற்கு அனைத்து மகளிர் போலீசார் சென்றனர். போலீசைக் கண்டதும் கிறிஸ்டோபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து லீலாபாயை விசாரணைக்காக வள்ளியூருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நிலையத்திலுள்ள ‘லாக்கப்’பில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலை 3 மணி அளவில் அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் அவர் உடல்நலம் நன்றாக உள்ளதாக அவரை பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை கருங்கல்லில் கொண்டு போய் விடுவதற்காக போலீஸ் ஜீப்பில் மகளிர் போலீசார் அழைத்துச் சென்றனர். காவல்கிணறை கடந்து ஜீப் சென்றபோது லீலாபாய் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் லீலாபாய் மகளிர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா என்பது தெரியவரும். வள்ளியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் மர்மச்சாவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Blood vomit, woman, police vehicle, mystery death
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...