×

களக்காடு - முண்டந்துறை காப்பகத்தில் அதிகரிக்கும் புலிகள் எண்ணிக்கை

களக்காடு : நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காப்பகம், தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமைக்குரியது. தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகத்தின் தனிச்சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஓங்கி உயர்ந்த மரக்கூட்டங்களின் அடர்த்தி, விண்ணை முட்டும் மலை சிகரங்கள் பச்சைப்பட்டு உடுத்தியதுபோல் பசுமையுடன் காட்சியளிக்கும் வனப்பகுதிகள், அதன் நடுவே சுதந்திரமாக சுற்றித் திரியும் வன விலங்குகள், எண்ணிலடங்கா அரிய மூலிகைகள் என இதன் சிறப்புகள் ஏராளம். இங்குள்ள நீர்நிலைகள் மற்றும் தூய்மையான காற்று, இறைவன் நமக்கு அளித்த நன்கொடை என்றே கூறலாம்.

கடந்த 1962ம் ஆண்டு 251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு புலிகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. இதேபோல் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு சரணாலயங்களும் இணைக்கப்பட்டு, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் உதயமானது. இதன் மொத்த பரப்பளவு 1,601 சதுர கிலோ மீட்டர். இதில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அடர்ந்த காடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாக திகழும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, அம்பை முண்டந்துறை, பாபநாசம், கடையம் வன சரகங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப்பகுதியும் களக்காடு புலிகள் காப்பகத்துடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் மேற்கு, தெற்கு, வடக்கு பகுதிகள் வனப்பகுதிகளாலும், கிழக்கு திசை மட்டும் கிராமங்களாலும் சூழப்பட்டுள்ளது.

காப்பகத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென அமைக்கப்படும் குழுவினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரிப்பது போன்ற முறைகளில் கணக்கெடுப்பர். சேகரிக்கப்படும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை டேராடூன் வன ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வனவிலங்குகள் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

தற்போது கணக்கெடுப்பு பணிகளை எளிமையாக்க செல்போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி, அதில் பதிவாகும் படங்கள் மூலமும் கணக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு 500 கேமராக்கள் வரை வனப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மட்டுமின்றி, அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் 10 புலிகளும், 2013ம் ஆண்டில் 11 புலிகளும், 2014ல் 14 புலிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இக்காப்பத்தில் 16 முதல் 18 புலிகளும், 80 சிறுத்தைகள், 50 யானைகள் வரை உள்ளன. இக்காப்பகம் 448 அரிய வகை தன்னகத்தன்மை கொண்ட தாவர இனங்களையும், 103 தன்னகத்தன்மை கொண்ட விலங்கினங்களையும் கொண்டுள்ளது.

இந்த காப்பகத்தில் புலிகள் மட்டுமின்றி, சிங்கவால் குரங்கு, கருமந்தி, அனுமன் குரங்கு, நீலகிரி வரையாடு, கரடி, யானை, செந்நாய், சிறுத்தை, கடமான், கடம்பை மான், புள்ளிமான் காட்டெருமை, காட்டு பன்றி கழுதைப்புலி, காட்டு பூனை உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன. இதில் சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடுகள் அரிய வகை விலங்குகள் ஆகும். ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகளும் உள்ளன. வனப்பகுதியில் மரப்பொந்துகளில் உள்ள நீரை மட்டுமே நம்பி வாழும் மரநண்டு இனம் கண்டறியப்பட்டு உள்ளது. களக்காடு மலைப்பகுதியில் அபூர்வ பறக்கும் தவளை (களக்காடு கிளைடிங் ப்ராக்) காணப்படுவது இப்பகுதியின் உயிர்பன்மைக்கு மற்றும் ஒரு சான்றாகும்.

தாமிரவருணி வண்ணக்கெண்டை மீன், 1953ம் ஆண்டிலும், கேரா களக்காடன்சிஸ் மீன் 1993ம் ஆண்டும், கன்னிக்கட்டி கண்ணாடி கெண்டை மீன் 2003ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட நன்னீர் மீன்கள் புலிகள் காப்பகத்தின் 55க்கும் மேற்பட்ட மீன்வளத்தை பறை சாற்றுகின்றன. மனித உணவு சங்கிலியில் புலி முதலிடத்தில் உள்ளது. புல் மற்றும் தாவரங்களை உண்ணும் கடமான், காட்டெருமை போன்றவைகளை புலி உண்ணும். எனவே புலி அதிகமாக இருக்க வேண்டுமானால் காட்டெருமை, கடமான்கள் அதிகளவில் இருக்க வேண்டும்.

காட்டெருமை, கடமான்கள் அதிகளவில் இருக்க அவைகள் உண்ணும் புல் மற்றும் தாவர வகைகள் அதிகளவில் இருக்க வேண்டும். புல் மற்றும் தாவரங்கள் அதிகளவில் இருந்தால் அப்பகுதி பசுமையாக உள்ளது என்று அர்த்தம். வனப்பகுதி பசுமையாக இருந்தால் அதன் மூலம் மழைப்பொழிவு அதிகரிக்கும். மழைப்பொழிவு அதிகரித்தால் விவசாயம் செழிக்கும். எனவே மனித வாழ்வுக்கும், புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று இயற்கை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பசுமை மாறாக்காடுகள் அதிகம்


alignment=


தமிழகத்திலேயே அதிகளவில் இங்குதான் 400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஈரப்பதமிக்க பசுமை மாறாக்காடுகள் தொடர் காடுகளாக உள்ளன. இந்த பசுமை மாறாக் காடுகளே வற்றாத ஜீவநதி தாமிரவருணி உருவாக காரணமாகும். உலகிலேயே தாவர பல்லுயிர் பெருக்கம் மிகுதியாக காணப்படும் இடங்களில் ஒன்றாக இக்காப்பகம் திகழ்கின்றது. மலைநன்னாரி, ஆரியல்பத்ரம், சட்டன்பச்சிலை, ஆரோக்கிய பச்சை, ஆற்றுநெல்லி, காட்டு ருத்ராட்சம், லேடிஸ் ஸிலிப்பர் ஆர்க்கிட் போன்ற பல அபூர்வ அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன.

காப்பகத்தை மேம்படுத்த சூழல் மேம்பாட்டு திட்டம்

புலிகள் காப்பகத்தை மேம்படுத்த கடந்த 1995ம் ஆண்டு சூழல் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் 288 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வனக்குழு உறுப்பினர்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் வாழ்வாதாரம் உயர கணினி பயிற்சி, டிரைவிங், அழகுகலை, நர்சிங், தையல் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம மக்கள் காடுகளை சார்ந்த தொழில்களை அதாவது மரம் வெட்டுதல், விறகுகள் சேகரித்தல், தேன் எடுத்தல் போன்றவைகளை விட்டுவிட்டு மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். சூழல் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தனி வன சரகர்கள், வனவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை கண்காணிக்க களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சூழல் மேம்பாட்டு அதிகாரியும் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கிராம மக்களின் பங்களிப்புடன் வனப்பகுதிகள் பாதுகாப்பில் சிறந்த பணியாற்றியதற்காக தேசிய புலிகள் ஆணையம் இக்காப்பகத்திற்கு விருது வழங்கி பாராட்டி உள்ளது. சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம வனக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 8 கோடி ரூபாய், தற்போது 84 கோடியாக சுழற்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

450க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள்


alignment=


புலிகள் காப்பகம், சிங்கவால் குரங்குகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. உலகளவில் 4 ஆயிரம் சிங்கவால் குரங்குகளே உள்ள சூழ்நிலையில், இங்கு மட்டுமே அவை 450 எண்ணிக்கைக்கு மேல் காணப்படுகின்றன. இந்த சிங்கவால் குரங்கு 200க்கும் மேற்பட்ட தாவர வகைகளை உணவாக உட்கொள்கின்றது என்ற தகவல் இவ்வனப்பகுதியின் உயிர்பன்மைக்கு ஓர் சான்று.

14 நதிகள் உற்பத்தியாகின்றன

திருக்குறுங்குடி முதல் கடையம் வரையிலான இந்த புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, பச்சையாறு உள்பட 14 நதிகள் உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஓடுகின்றன. இதில் 11 அணைகளும் கட்டப்பட்டுள்ளன.


Tags : Kalakad ,Munndanthurai ,tigers,Tirunelveli,Tigers Archive
× RELATED திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள...