×

கயத்தாறு அருகே 2500 ஏக்கரில் ராணுவ தளம் விமான நிலையமாக மாறுமா?

*83 ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாத ஓடுதளம்

கோவில்பட்டி :   கயத்தாறை அடுத்த பன்னீர்குளம் கிராம பகுதியில்  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட  விமானதளம், விமான நிலையமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு  தென் மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.சுதந்திரம் பெறுவதற்கு  முன்னர், இந்தியாவை ஆட்சி புரிந்து வந்த ஆங்கிலேயர்கள், அனைத்து  மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் விமானப் படை தளங்களை அமைத்தனர். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை (அப்போது தூத்துக்குடி, நெல்லையுடன் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது), ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளை  உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த பன்னீர்குளம், முன்னீர்குளம் பகுதியில் கடந்த  1936ம் ஆண்டு 2500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட விமான தளம்  அமைக்கப்பட்டது.

கயத்தாறு, கடம்பூர் ஆகிய ஊர்களுக்கு இடையே  இந்த விமான தளம் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் கிடைத்த பின்னர், இந்த விமான தளம் பயனின்றி போனது. 2500  ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விமான தளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள்  வந்து இறங்கியதாகவும், இதேபோல் 2 விமானங்கள் வான் மேலே புறப்பட்டுச்  சென்றதாகவும்  ஊர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். அந்தளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்ட விமான ஓடு தளம் இந்த  விமானதளத்தில் உள்ளது. இதற்கான விமான ஓடுதளம் (ரன்வே) மட்டும் சுமார் 60 ஏக்கரில்  அமைந்துள்ளது. 5 அடி ஆழத்திற்கு ஓடு பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்துள்ளனர்.

சுமார் 70 ஆண்டுகளாகியும் இன்றுவரை ஓடுதளம் (ரன்வே) எந்தவித சேதாரமும்  இல்லாமல் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விமான இறங்குதளத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை இறங்கி சென்றுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு  முன்பு 2 முறை விமான படையைச் சேர்ந்த விமானம் இந்த விமானதளத்திற்கு  வந்திறங்கியது. இதனால் இங்கு விமான நிலையம் அமையுமா என்று அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆசிஷ்குமார், கயத்தாறு விமான தளத்திற்கு 2 முறை வருகை வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


alignment=



ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற இந்த விமான நிலையத்தில் உள்ள  ஓடுதளம் பகுதியில் அப்பகுதி விவசாயிகள் பயிர் வகைகளை பிரித்து எடுக்கும்  மற்றும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு  நேரங்களில் மதுஅருந்தும் இடமாக இந்த விமானதளத்தை குடிமகன்கள் பயன்படுத்தி  வருகின்றனர். மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே  வீசி விட்டுச் செல்கின்றனர். நீண்ட காலமாக விமான தளம்  பராமரிக்கப்படாததால், விமான தளத்தில் ஆங்காங்கே முட்செடிகள் அடர்ந்து  வளர்ந்தும், களை செடிகளும் வளர்ந்தும் காணப்படுகிறது.


alignment=



மதுரை - நெல்லை சாலையில் கயத்தாறு அருகே அமைந்துள்ளது இந்த விமான தளம். மதுரைக்கு அடுத்து தூத்துக்குடியில்தான் விமான நிலையம் அமைந்துள்ளது. அதே நேரத்தில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நெல்லை - கோவில்பட்டி இடையே அமைந்துள்ள இந்த விமான தளத்தை விமான நிலையமாக மாற்றலாம். அவ்வாறு மாற்றும் போது கங்கைகொண்டானில் அமைந்துள்ள ஐடி பார்க்கிற்கு தொழிலதிபர்கள் எளிதில் வந்து செல்ல முடியும். இதன் மூலம் கங்கைகொண்டான் சிப்காட் வளர்ச்சி பெறும்.

இதனால் தொழில் வசதிகளும் பெருகும். பன்னாட்டு நிறுவனங்கள் விமான நிலையமும், நான்கு வழிச் சாலையும் அருகில் இருக்கும் இடத்தில்தான் தொழில் தொடங்குகின்றன. அந்த வகையில் இந்த பழமையான விமான படைத்தளம் விமான நிலையம் அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். எனவே இந்த விமான தளத்தை சீரமைத்து பயணிகள் செல்லும் விமான நிலையமாக  மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மாவட்ட  மக்கள் மற்றும் விமான பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பன்னீர்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைச்சாமி கூறுகையில், மூன்றரை கிலோ மீட்டர் தொலைவு சுற்றளவு கொண்ட இந்த  ஓடுதளத்தில் விமானங்கள் ஏறி, இறங்கலாம். இந்த விமான ஓடுதளத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற வேண்டும்.  இதனால் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும என்றார். இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தூத்துக்குடியை அடுத்து இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டியாகும்.

 இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கல்வி  நிறுவனங்கள் உள்ளன. வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் தொழில் நிமித்தமாக வந்து செல்கின்றனர். வணிகர்களுக்கு தொழில் நிமித்தமாக சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல  வேண்டுமெனில் மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்கின்றனர். எனவே  மத்திய, மாநில அரசுகள் கயத்தாறு அருகே உள்ள விமான ஓடுதளத்தை பயணிகள் விமான  நிலையமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

3 ஆண்டுக்கு முன் ஆய்வு

கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா கூறுகையில், ‘கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு  உட்பட்ட கயத்தாறில் இருந்து பன்னீர்குளம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில்  அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளம் இருப்பதாக எனது கவனத்திற்கு  தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமான ஓடுதளத்தை மத்திய  அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்றனர். அதற்கு பின்னர்  யாரும் விமான ஓடுதளம் குறித்து எந்தவித ஆய்வு மேற்கொள்ளவில்லை. தற்போது  பராமரிப்பின்றி காணப்படும் இந்த விமான ஓடுதளத்தை விமான நிலையமாக மாற்ற  எனக்கு எந்தவித கோரிக்கை மனுவும் வரப்படவில்லை’ என்றார்.

சுற்றுலா வளர்ச்சி பெறும்

ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் தமிழரசன் கூறுகையில், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற 3  மாவட்டங்கள் தொழில், வணிக நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாகும். குற்றாலம்,  கன்னியாகுமரி, மணப்பாடு போன்ற ஏராளமான சுற்றுலா தலங்களும், திருச்செந்தூர்  உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களும் அமைந்துள்ளது. இம்மூன்று  மாவட்டங்களுக்கும் தூத்துக்குடி அருகே வாகைகுளத்தில் மட்டுமே விமான நிலையம்  அமைந்துள்ளது. இதனால் இம்மூன்று மாவட்ட மக்கள், தொழிலதிபர்கள், வணிக  பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்  கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்துள்ள விமான ஓடுதளத்தை விமான நிலையமாக  மாற்ற மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெறும், என்றார்.

Tags : Kayathar, military base,airport,kovilpatty
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு