சென்னை - குமரி - திருவனந்தபுரம் நீர்வழி போக்குவரத்து அறிவிப்போடு நிற்கும் சுற்றுலா திட்டம்

*அரசு கவனம் செலுத்துமா?

நாகர்கோவில் :  சாலைகளில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்ட செல்கிறது. பெரும்பாலான நகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேம்பாலங்கள், சாலைகள் விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தாலும், சில ஆண்டுகள் நெருக்கடி இல்லாமல் இருக்கும் சாலைகள், மீண்டும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதே நிலைதான் குமரி மாவட்டத்திலும் நீடித்து வருகிறது.

பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள் திறப்பதற்கு முன்பு கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரத்திற்கு சாலை மார்க்கமாக செல்லும்போது அதிக நேரம் விரையம் ஆகும். அந்த அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. தற்போது ஓரளவுக்கு போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. இருப்பினும் காலை, மாலை வேளைகளில் நகர பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி நீடித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாகவும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்கும் நீர்வழி போக்குவரத்தை நடமுறைப்படுத்தினால், சாலை போக்குவரத்து ஓரளவு குறையும். மன்னர் காலத்தில் திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், தென் திருவிதாங்கூரின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது மற்றும் கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்காக, உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மாவினால் ஏவிஎம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை முற்றிலும் நிறைவேற்றியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடியை, இந்த நீர்வழிப் போக்குவரத்து தீர்த்து வைத்திருக்கும். இது தவிர சுற்றுலாத்துறையும் மேம்பட்டிருக்கும். தேங்காய்பட்டணம் முதல் குளச்சல் வரை ஏவிஎம்கால்வாய் ஆக்ரமிப்பு பிடியில் சிக்கி சில பகுதிகளில் சிறிய ஓடைபோல் காட்சி அளிக்கிறது.    அவ்வப்போது ஏவிஎம் சானலை தூர்வாரி அகலப்படுத்தி போக்குவரத்து தொடங்குவதாக அரசு அறிவிக்கும். ஆனால் திட்டங்கள் அறிவிப்போடு நின்று விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் கேரள மாநிலத்தில் உள்ள ஏவிஎம் சானலில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள், அங்குள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால், சுற்றுலாவளர்ச்சி அடைந்து வருகிறது.   மத்திய அரசு நீர்வழி போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்தவகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரி-சென்னை, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் நீர்வழி போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது.  கடந்த 2017ம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இதுகுறித்து அறிவித்தார். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறியிருந்தார்.

alignment=

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு நீர்வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என கடந்த 2017 ஆண்டு அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் அறிவிப்போடு கிடக்கிறது. பணி தொடங்காமல் அப்படியே உள்ளது. கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுர் சிலைக்கு படகு மூலம் சுற்றுலாபயணிகள் அதிகம் பேர் சென்று வருகின்றனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் அதிக சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். வெளிநாடு, மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்து பின்னர் சாலை மார்க்கமாக  கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். இதனால் பயண நேரம் அதிகரிப்பதால் சுற்றுலா வருபவர்கள் பலத்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சென்னை முதல் திருவனந்தபுரம் வரை நீர்வழி போக்குவரத்து தொடங்கி இருந்தால், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வழி போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். நீர்வழி போக்குவரத்தை பயன்படுத்துவது புது அனுபவமாக இருக்கும்.  அதிக சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். சுற்றுலாத்துறைக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால் அறிவிப்போடு நின்றுவிட்டதால், இந்த திட்டம் கனவாக மாறியுள்ளது. இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டும். இதனால் கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாடு அடையும் என குமரி மாவட்ட மக்கள் எதிர்பார்கின்றனர்.

alignment=

எந்தஅறிவிப்பும் வரவில்லை

இது குறித்து குமரி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியிடம் கேட்டபோது: நீர்வழி போக்குவரத்து திட்டம் பற்றி எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. கன்னியாகுமரி முதல் சென்னை, கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் நீர்வழி போக்குவரத்து தொடர்பான திட்டம் பற்றி எனக்கு தெரியாது என்றார்.

சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்

 இது குறித்து சுற்றுலா ஆர்வலர் சிலுவை வஸ்தியான் கூறியதாவது: ஏவிஎம் சானலை தூர்வாரி ஆக்ரமிப்புகளை அகற்றுவதால் திருவனந்தபுரம் வரை நீர்வழிப் போக்குவரத்து அதிகரித்து சாலைகளில் நெரிசல் குறையும். மண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலுக்கு கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வருகிறார்கள்.

அவர்கள் இந்த ஏவிஎம் சானலை பயன்படுத்துவார்கள். மேலும், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்கள் திருவனந்தபுரத்திற்கு இந்த சானல் வழியாக கொண்டு செல்லமுடியும். சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏ.வி.எம்.சானலை தூர்வாரி  சீர்படுத்தி பயன் பாட்டுக்குக் கொண்டு வந்தால் நிலத்தடி நீரின் மட்டம்  உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியும் என்றார்.

Related Stories: