×

மண்சரிவால் உடைமைகளை இழந்த நீலகிரி மக்கள்

*விதிமுறை மீறும் கட்டடங்கள் ஒழுங்குபடுத்தப்படுமா?

ஊட்டி : மண் சரிவால் நீலகிரி மாவட்ட மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். விதிமுறை மீறும் கட்டடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1978ம் ஆண்டு மிக அதிக மழை பெய்தது. ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டது. அதன்பின், லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்ட போதிலும், கடந்த 1990ம் ஆண்டு மஞ்சூர் அருகேயுள்ள கெத்தையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின், 1993ம் ஆண்டு குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.

 அதன்பின் 2009ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும், எப்போதாவது மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவுகளில் மனிதர்கள், விலங்குகள் என பல உயிர்கள் பலியாகின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இங்குள்ள புவியியல் அமைப்பு.

 பெரும்பாலான குடியிருப்புகள் பள்ளத்தாக்குகளிலும், செங்குத்தான மலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்துள்ளதாலும், கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியின்றி, பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிலச்சரிவு ஏற்படுகிறது.  நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுமானம் மற்றும் மக்கள் தொகையை மட்டும் தாங்க முடியும். ஆனால், தற்போது நாளுக்கு நாள் இங்கு வெளியாட்கள் குடியேற துவங்கியுள்ளனர். குளிர்பிரதேசம், சுற்றுலா நகரம் என்பதால், பலரும் இங்கு வசிக்க ஆசைப்படுகின்றனர்.

இவர்கள், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி விளையும் பூமியை விலைக்கு வாங்குகின்றனர். பின்னர், அங்கு பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டுகின்றனர். இதுபோன்ற கட்டிடங்கள் கட்டும்போது, அதற்கு தேவையான வழித்தடங்கள் மலைகளின் மீதும், மலைகளை பிளந்தும் அமைக்கின்றனர். மேலும், சரிவுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த சரிவுகளில் தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு தடுப்பு சுவர், சாலைகள் அமைக்கப்படுகிறது.


alignment=



 இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடிச்செல்ல வழியின்றி, மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகமான சரிவு உள்ள இடங்களில், அடுக்குத்தளம், சம உயர வரப்புகள் ஏற்படுத்த வேண்டும். கட்டடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் முறையாக செய்தால், மண்சரிவு மற்றும் மண் அரிப்பு தடுக்கப்படும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மழைக்காலங்களில் இம்மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, நீலகிரி மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் இழப்பது வாடிக்கையாகி விட்டது. இனி வரும் காலங்களில் புதிய கட்டடம் கட்டும்போது, அதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 இதுபற்றி மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 90 சதவீத நிலச்சரிவு மிக அதிக மழை பெய்வதால் ஏற்படுகிறது. மற்றொன்று நிலத்தை நாம் பயன்படுத்துவதை பொறுத்து ஏற்படுகிறது. கட்டடம் மற்றும் விவசாய நிலங்கள், படிமட்ட முறையில் அமைக்கப்படாமல் உள்ளதாலும், வடிகால்கள் தூர் வாரப்படாமலும் உள்ளதாலும், இதுபோன்ற பெரு வெள்ளம் வரும்போது விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குதல், மேல் மட்ட மண் அடித்துச் சல்லுதல் போன்றவைகள் ஏற்படுகிறது. மேலும், நீரோடைகள் மற்றும் மழை நீர் வடிகால்கால்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், தண்ணீர் செல்ல வழியின்றி இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.   

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீரோடைகள் மற்றும் ஆறுகளை தூர் வாரினால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல், நீர் வழித்தடங்களில் ஆக்கிரிமிப்புக்களை அகற்றுவதன் மூலம் தண்ணீர் தேங்குதல், மண் அரிப்பு தடுக்கப்படும். சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, சாய்மானமாக இல்லாமல், செங்குத்தாக வெட்டி எடுப்பதால், மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் சாலையோரங்களில் பெரிய அளவிலான மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கூறினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வாழ தகுதி இல்லாத, அதாவது நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் குடியிருப்பு உள்ளது. ஓடை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இவர்கள், சாதாரண ஏழை மக்கள். கன மழை பெய்யும்போது, இதுபோன்ற பகுதிகளில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு, பெரிய அளவில் சேதம் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது. ஓடை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மழை நீர் வடிந்து செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Tags : Landslide , ooty people,Buildings
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி