தஞ்சை குளங்களை தூர்வாருவதாக கூறி தில்லுமுல்லு

* அதிகாரிகள் உடந்தை வெளிச்சம்

* மணலை அள்ளும் கொடுமை

பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரி, குளங்களில் உள்ள மண்ணை எடுப்பதால் நீர்பிடிப்பு பரப்பளவு அதிகரிக்கும். இதனால் அருகில் விவசாய நிலத்திற்கு தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து அரசின் முன்னோடி திட்டமான வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாய பயன்பாட்டிற்காகவும், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற சொந்த பயன்பாட்டிற்காகவும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1951 ஏரிகள், குளங்கள், கால்வாய்களில் இதற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட அரசிதழில் வெளியிட்டுள்ளபடி தஞ்சை வட்டத்தில் 166 இடங்களிலும், திருவையாறு வட்டத்தில் 73 இடங்களிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 315 இடங்களிலும், பூதலூர் வட்டத்தில் 136 இடங்களிலும், கும்பகோணம் வட்டத்தில் 185 இடங்களிலும், பாபநாசம் வட்டத்தில் 169 இடங்களிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 252 இடங்களிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 473 இடங்களிலும், பேராவூரணி வட்டத்தில் 182 இடங்களிலும் என தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1951 ஏரி, குளங்கள், கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்களில் இதுவரை 47 லட்சத்து 65 ஆயிரத்து 572 கன மீட்டர் மண் எடுக்கப்பட்டு சுமார் 25 ஆயிரத்து 321 விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை மற்றும் சிறுகனிம சலுகை விதியின்படி வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வகையில் மண் எடுப்பதற்கு விண்ணப்பதாரரின் இருப்பிடம், விவசாய நிலமானது விண்ணப்பிக்கும் ஏரி, குளம், கால்வாய் அமைந்துள்ள வருவாய் கிராமத்திலோ அல்லது அதை சுற்றியுள்ள வருவாய் கிராமத்திலேயே அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 75 கன மீட்டருக்குள்ளும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 90 கன மீட்டருக்குள்ளும் இலவசமாக வண்டல் மண், சவுடு மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்காக இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 கன மீட்டருக்குள் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதற்கு தாசில்தார்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புறநகர் பகுதிகளில் இத்திட்டத்தால் ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தோர் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். அந்தந்த பகுதி விவசாயிகள் பெயரில் வருவாய்த்துறையில் அனுமதி பெற்று சில பெரும்புள்ளிகள் அரசின் இலவச திட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி பல கோடி ரூபாய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நிலங்களை பிளாட் போட அனுமதி பெற்ற இடங்களில் அல்லது விவசாய நிலங்களில் தாங்கள் விற்பனைக்கு வைத்துள்ள பிளாட்டுகளுக்கு மண் வைத்து வருவதாக பரவலாக புகார் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சிலர் மண்ணை எடுத்து பிளாட்டுகளில் வைக்க லோடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் வெற்றி கூறியதாவது, தஞ்சை மாவட்டத்தில் சவுடு மண், வண்டல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டபோது எப்படியாவது தூர்ந்துபோய் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை காலங்களில் நீர் சேமிப்புக்கு உதவினால் போதும் என நிம்மதியாக இருந்தது. கிராமப்புறங்களில் பல இடங்களில் விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகர் மற்றும் புறநகர்களில் கனிம சட்ட விதிமுறைகளை மீறி மிக அதிக ஆழம் வரை மண் வெட்டி அள்ளப்படுகிறது. அதுவும் பெரிய ராட்சத இயந்திங்களான பொக்லைன், கிட்டாச்சி போன்றவைகள் மூலம் பல ஆயிரம் யூனிட்டுகள் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

டிடிபி அப்ரூவல் வீட்டுமனைகளுக்கு மண் யூனிட் கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு விவசாய நிலத்தின் சர்வே எண் அடங்கிய இடத்தில் மண் கொட்டப்படும் என விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்கப்படுகிறது. ஆனால் அதே சர்வே எண் கொண்ட இடத்தில் நிலத்தில் தான் எடுக்கப்படும் மண் கொட்டப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் ஒரு லோடு மண் இவ்வளவு என விலை நிர்ணயித்து ஆங்காங்கு விற்பனை செய்கின்றனர். உதாரணத்திற்கு தஞ்சை மாரியம்மன்கோயில் அருகே உள்ள சமுத்திரம் ஏரியில் சில விவசாயிகளை பினாமியாக பயன்படுத்தி மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆனால் அவை விவசாய பயன்பாட்டுக்கு மண் வைக்கப்படுவதில்லை. வீட்டு மனைகள் மற்றும் வெளி வியாபாரிகளுக்கும் மண் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வண்டல் எடுப்பு திட்டத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசின் நல்ல நோக்கம் சிதைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டுமானால் அதிகாரிகள் மண் வைக்கப்படும் இடத்தையும் கண்காணிக்க வேண்டும் என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை

தஞ்சை தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்டபோது, வண்டல் மண், சவுடு மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 9 அடி ஆழம் வரை மண் எடுக்கலாம். மண் எடுக்கப்படும் அளவு குறித்து அங்கு பணியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல் இதுவரை மண் விற்பனை செய்யப்படுவதாக புகார் இல்லை. அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: