×

போக்குவரத்து நெரிசலால் திணறும் மாநகரம் சேலத்தில் அறிவிப்போடு அந்தரத்தில் நிற்கும் ரிங்ரோடு

*தொடரும் சிரமத்திற்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

சேலம் : சேலம் மாநகராட்சி 91.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. 60 வார்டுகளிலும் சுமார் 9.50 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுபோக தினமும் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் வந்து செல்லும், வளரும் நகரமாக சேலம் விளங்குகிறது. இதனால், சேலம் மாநகரை மேம்படுத்தப்பட்ட நகராக மாற்ற, பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு திட்டமிட்டது. இதன்படி அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நடைமுறையில் இருந்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர் புற அபி விருத்தி திட்டத்தின் (ஜெஎன்என்ஆர்யூஎம்) கீழ் சேலம் மாநகரை மேம்பட்ட நகராக மாற்ற திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தில் ₹1000 கோடி நிதியை மத்திய அரசிடம் பெற்று, விரிவான சாலைகள், ரிங்ரோடு, டெர்மினல் பஸ் ஸ்டாண்டுகள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்பாடு போன்றவற்றை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கடந்த 2012-13ம் ஆண்டு, மாநகராட்சி பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது. 2011ம் ஆண்டு இறுதியிலேயே ஜெஎன்என்ஆர்யூஎம் திட்டத்தில் சேலம் மாநகராட்சியை இணைக்க வலியுறுத்தி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், நகரமைப்பை மேம்படுத்துவதில் 25 சதவீத தொகையை மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து வழங்கி மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக தலைமையில் அமைந்த புதிய அரசு, நகர்புற அபிவிருத்தியை மேற்கொள்ளும் (ஜெஎன்என்ஆர்யூஎம்) திட்டத்தை ரத்து செய்தது. இதற்கு பதிலாக வெளிநாடுகளின் உதவியுடனும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவியுடனும் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 12 ஸ்மார்ட் சிட்டியை அமைப்பது என முடிவெடுத்து, அதற்கான பணியை மேற்கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டு, அறிவிப்பை வெளியிட்டது. இதில், தமிழகத்தில் 6மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டியாக மாறும் பட்டியலில் இடம் பெற்றது. ஸ்மார்ட் சிட்டியை பொறுத்தவரை முழுக்க முழுக்க தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் அனைத்து வித அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், தனியாக எந்தவொரு நிதியும் வழங்கப்படமாட்டாது என தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.


alignment=



இதனால் புதிதாக உருவாகும் ஸ்மார்ட் சிட்டிகள், முழு நகரமைப்புபடி மேம்பட்ட நகரமாக உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதிலும், சேலம் மாநகரை பொறுத்தவரை வாகனங்களின் பெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் தலையாய பிரச்னைகளாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வரால் 2ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு திட்டத்தையும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ெடர்மினல் பஸ் ஸ்டாண்ட் ேகாரிக்கையையும் துரித கதியில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  சேலம் மாநகரை பொருத்தவரை, 849 கிலோ மீட்டர் தூர சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்துமே, குறுகலாக காணப்படுகிறது. இதுவே ேபாக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். எனவே, நகரில் உள்ள ஓமலூர் மெயின்ரோடு, திருச்சி மெயின்ரோடு, ஏற்காடு மெயின்ரோடு, அம்மாபேட்டை மெயின்ரோடு, சாரதா கல்லூரி ரோடு, ஜங்ஷன் மெயின்ரோடு, கன்னங்குறிச்சி மெயின்ரோடு ஆகியவற்றை புறநகர் சாலைகளோடு இணைக்கும் சுற்றுச்சாலைகள் (ரிங்ரோடு) மிகவும் அவசியம் என்கின்றனர் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள்.  


டெர்மினல்  பஸ் ஸ்டாண்ட்  அமைப்பதும் மிக அவசியம்

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கும் தினசரி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிழக்கு பகுதியில் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் இயக்கப்படும் பஸ்கள் அம்மாப்பேட்டை மிலிடெரி ரோடு வழியாக,  8கிலோ மீட்டர் மாநகர பகுதியை சுற்றி புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வருகிறது.  இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்தும், கொங்கு மண்டலத்தில் இருந்தும் வரும் பஸ்கள் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி பைபாஸ், திருவாக்கவுண்டனூர் பைபாஸ், 3 ரோடு வழியாக புதிய பஸ் ஸ்டாண்டை அடைகிறது.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மேட்டூர் உள்ளிட்ட மார்க்கங்களில் வரும் பஸ்கள் குரங்குச்சாவடி, 5 ரோடு, சொர்ணபுரி கடந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றன. இந்த மார்க்கங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து, செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், பயணிகளின் சிரமத்தை போக்க சேலம் அம்மாப்பேட்டை, சீலநாயக்கன்பட்டியில் டெர்மினல் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : salem ,Ring Road,announcement, not constructed,
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...