ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சதுப்பு நிலக்காடுகள் அழியும் அபாயம்

*விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அச்சம்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தால் இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் அழியும் அபாயம் உள்ளதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.

இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்னை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படம்  பிச்சாவரம் பகுதியில் படமாக்கப்பட்டதால் இப்பகுதி பிரபலமாகியது. இதனால் இங்குள்ள தீவுக்கு எம்ஜிஆர் திட்டு என பெயர் வந்தது. பின்னர் பிச்சாவரம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. சுரபுன்னை காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று ரசித்து வருகின்றனர். வனத்துறையினரும் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பிச்சாவரத்தில் படகு சவாரி நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். மேலும் இப்பகுதியில் கடலோரத்தில் எம்ஜிஆர் திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில் மிகு தீவுகள் உள்ளன.  கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை இத்தீவுகளை புரட்டிபோட்டு விட்டது. அதில் இத்தீவுகளில் வசித்த ஏராளமானோர் இறந்ததால் தற்போது அங்கு வசிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமியில் இத்தீவுகள் பாதிக்கப்பட்டாலும் பிச்சாவரம் சுதுப்பு நிலக்காடுகள் உள்ள பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளால் அப்பகுதி காப்பாற்றப்பட்டதாக மக்கள் நினைவு கூறுகின்றனர்.

இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் அனைத்து வகையான ரசாயன பொருட்களை எடுப்பதற்கும், அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது கடலூர் மாவட்டம். காவிரி டெல்டா பாசனத்தின் கடை மடை பகுதியாக விளங்கி வரும் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு முற்றிலும் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் முதல் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை புகழ்பெற்ற பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டிற்கு 490 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இரண்டாவது ஹைட்ரோகார்பன் மண்டலம் வடிவமைக்கப்பட்டு தனியார் நிறுனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் பிச்சாவரம் சதுப்புநில காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: