புண்ணியதலங்கள் நிறைந்த மாவட்டத்தில் ‘சோதனை’ ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் கடும் இடநெருக்கடி

*பயணிகள் மட்டுமல்ல... பஸ் நிற்கக் கூட இடமில்லை

*பிளாட்பார்மில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

*அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதி

ராமநாதபுரம் : வரலாற்று சிறப்புமிக்க ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரமாக ராமநாதபுரம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் கடற்கரையோர மாவட்டம் என்றாலும் வரலாற்று திருத்தலங்களான ராமேஸ்வரம், தேவிபட்டிணம், திருப்புல்லாணி, ஏர்வாடி, ஓரியூர், தங்கச்சிமடம் என அனைத்து மதத்தினருக்குமான தெய்வ திருத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் இம்மாவட்டத்தில் நிரம்பியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தினசரி ராமேஸ்வரத்திற்கும், வியாழன், வெள்ளி கிழமைகளில் ஏர்வாடிக்கும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் திருப்புல்லாணி, தேவிபட்டிணம், ஓரியூர் ஊர்களுக்கும் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு மற்றும் ஆடி, தை, புரட்டாசி அமாவாசை தினங்கள், தங்கச்சி மடம் சந்தியாகப்பர் திருவிழா என விசேஷ தினங்களில் நாட்டில் பல ஊர்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் தவிர அனைத்து ஊர்களுக்கும் ரயில் சேவை இல்லாத நிலையில் வழிபாட்டுக்காகவும், சுற்றுலாவிற்கும் வரும் பயணிகள் பஸ் சேவையையே நம்பி உள்ளனர். ராமநாதபுரம் நகரில் ரயில் நிலையம் எதிரே பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டது. மொத்த பரப்பளவில் நடுவில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட இடத்தை பின்னர் விரிவாக்கம் செய்யலாம் என ஒதுக்கியிருந்த நிலையில் காலப்போக்கில் காலியிடத்தை டூவீலர் ஸ்டாண்டாக மாற்றி விட்டனர்.

நகராட்சி நிர்வாகத்தில உள்ள பேருந்து நிலைய வளாகத்தின் மூன்று புறங்களிலும் 80க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் என கடைகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் பெருகி விட்டன. அதிகரித்த கடைகள், ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் நிற்கவும், நடக்கவும் கூட முடியாத சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என போர்டு மட்டுமே உள்ளது பல ஆண்டுகளாக பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லை. இரவு நேர பயணத்திற்காக வரும் பயணிகள், அதிகாலை நேரத்தில் பஸ்சில் செல்ல கிராமங்களிலிருந்து இரவு வரும் பயணிகள் தங்க பாதுகாப்பான இடம் இல்லை.

alignment=

ராமநாதபுரத்திலிருந்து வெளியூர்களுக்கு முன்பு சுமார் 80 முதல் 120 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது பஸ்கள் மும்மடங்கிற்கு அதிகளவில் பெருகியுள்ளன. மேலும் ராமேஸ்வரத்திற்கு ரயில் பாலம் இருந்ததால் மண்டபம் வரை தினமும் 10க்கும் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. பாம்பன் சாலைப்பாலம், தூக்குப்பாலத்தை ரசிப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பஸ் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் தற்போது ராமநாதபுரத்திலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.

தற்போது ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு 350க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விஷேச தினங்களில் கூடுதலாக 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யாமல் உள்ளதால் நாள்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர். பஸ்களை நிறுத்தி வைக்க வழி இல்லாத நிலையில், பயணிகள் நிலை மேலும் பரிதாபமாக இருக்கிறது. இருக்கைகளும் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் பஸ் நிலைய கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் பெறுவதுடன், முறையாக பராமரிக்காத நிலையில் தூர்நாற்றம் அடிப்பதால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கட்டண கழிப்பறை பயன்படுத்தாமல் திறந்தவெளியிடங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் நிலையத்தின் ஒவ்வொரு மூலையிலும், துர்நாற்றம் தாங்க முடியாமல் இருக்கிறது. அதிகமாக பஸ் வந்து செல்லும் போது நிறுத்த இடமில்லாத நிலையில் கழிவுநீர் வழிந்தோடும் கால்வாய் அருகிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் வெளியூர்களிலிருந்து வருபவர்கள், முகம் சுழிக்கும் நிலை இருக்கிறது.

பஸ் நிலைய வருமானம், பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் நேரடியாக நிர்வாகித்து வருகிறது. பஸ் நிலையத்ததை தினமும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது நகராட்சியின் பொறுப்பு, ஆனால் வாடகை வசூல் செய்வதோடு சரி, பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை முறையாக பராமரிப்பதில்லை. பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமலும், சிறுநீர், ஓட்டல்கள் டீக்கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியும் மொத்தத்தில் இந்த பஸ்ஸ்டாண்டை சுகாதார கேட்டிற்கு ஆளாக்கி இருக்கிறது.

பஸ் நிலையம் பகுதியில் ‘கணக்குக்காக’ புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள மாவட்ட தலைநகர் பஸ் நிலையத்தில் இன்று வரை பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெரிய அளவில் அடிதடி வழிப்பறி பிரச்னைகள் ஏற்பட்டு தகவல் தெரிவித்தால் மட்டுமே போலீசார் வருகின்றனர். மேலும் புறக்காவல் நிலையத்திற்கு வயர்லெஸ் போன்ற உடனடி தகவல் தெரிவிக்க தேவையான கருவிகள் இல்லை. காவலர்கள் தங்கும் அறை போலவே உள்ளது. பஸ் வந்து செல்லும் வாயில்கள் முக்கிய இடங்களில் காட்சி பொருளாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருட்டு, வழிப்பறி என நடந்தால் கேமராவை பார்த்து அடையாளம் காண சென்றால் பழுதடைந்துள்ளது என கூறுகின்றனர். செயல்படாத கேமராக்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் வருமானத்தை மற்றும் பார்க்காமல், மக்களின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரோமியோக்கள் தொல்லை

கல்லூரி, பள்ளி மாணவிகள் கூறும்போது, ‘‘மாலை நேரத்தில் ரோமியோக்கள் தொல்லை அதிகம் உள்ளது. பஸ் நிலையம் அருகில் பெண்கள் கல்லூரி உள்ளதால், கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவிகள் மாலை நேரத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும்போது அதிவேகமாக டூவீலர்களில் காதை பிளக்கும் ஹாரன் சத்தத்தோடு மோதுவதுபோல வருகின்றனர். இதனால் பதற்றத்துடன் இன்றைக்கு என்ன நடக்குமே என பஸ்சிற்காக காத்திருக்கிறோம்’’ என்றனர்.

விரைவில் விரிவுபடுத்தலாமே?

பொதுமக்கள் கூறும்போது, ‘‘பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே சுமார் 5 ஏக்கர் அளவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை செயல்படுகிறது. வாரம் ஒருநாள் மட்டுமே நடக்கும் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றி அல்லது இடத்தை குறைத்து பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். நகரின் முக்கிய பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி கூடுதல் வணிக வளாகம் திறக்கப்பட்டு நகராட்சி வருவாய், பேருந்துகள், மக்கள் நிற்க போதுமான இடம் கிடைக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் பயணிகள் தங்கும் அறையை மாற்றி கடையாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து பிரச்னை எழுந்தபோதும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.

பயணிகள் ஓய்வறையை கடையாக மாற்றிய கமிஷனர்

நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ‘‘பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளுக்கு கடந்த ஆண்டு 100 சதவீத வாடகை உயர்த்தப்பட்டது. குப்பைக்கு என தனி வரி வசூல் செய்கின்றனர். காத்திருக்கும் பயணிகள் உட்கார இடமில்லை. ஓய்வறையை கடையாக மாற்றுகின்றனர். இன்னும் சில நாட்களில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்க இடமில்லாத அவல நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கும் அறையை கடையாக மாற்ற சிலர் முயன்றபோது, அப்போதைய கமிஷனர் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மாற்றினால் பிரச்னை வரும் என மறுத்துவிட்டார்.

வந்து சில மாதங்களான நிலையில் கமிஷனர் எந்தவிதமான அறிவிப்பு செய்யாமல் டெண்டர் விடாமல் வாடகைக்கு கொடுத்துள்ளார். இது கலெக்டருக்கு தெரியுமா என தெரியவில்லை. நகராட்சி நிர்வாகம் பணம் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளது. வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை’’ என்றார்.

இரவு நேரங்களில் பஸ்கள் வருவதில்லை

பயணி முருகன் கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. அருகில் உள்ள புனித தலங்கள். சுற்றுலா தலங்கள், அப்துல்கலாம் நினைவிடம் என மக்கள் அதிகளவில் வருகின்றனர். மாவட்ட தலைநகரில் உள்ள பஸ் ஸ்டாண்டில் குடிக்க தண்ணீர் இல்லை. தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. பஸ் ஸ்டாண்டின் உள்ளே குண்டும் குழியுமாக உள்ளது. சுற்றுச்சாலை திறக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் பஸ்கள் ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு வருவதில்லை இதனால் இரவு நேரங்களில் பயணிகள் பல மணி நேரங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது’’ என்றார்.

Related Stories: