காட்பாடி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இறப்பவர் சடலங்களை நல்லடக்கம் செய்யும் போலீஸ்

வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இறப்பவர் சடலங்களை மீட்கும் போலீஸ்காரர் ஒருவர் சடலங்களை நல்லடக்கம் செய்து மலரஞ்சலி செலுத்தி வருகிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்து பல்வேறு நகரங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில், குடும்ப வறுமை, உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை மாற்றம் போன்ற காரணங்களால் வீட்டில் இருந்து வெளியேறும் பலரும் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலங்களின் கீழே தஞ்சம் அடைகின்றனர்.

பயணிகளிடம் பிச்சை எடுத்து அன்றாட உணவுகளை உட்கொண்டு வாழ்நாளை கடத்துகின்றனர். இதில் ஒருசிலர் வறுமை காரணமாக வெளியேறினாலும், பெரும்பாலானவர்கள் பணத்தாசை பிடித்த குடும்ப உறவினர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்தில் தஞ்சமடைகின்றனர். வயோதிகம், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் இறக்க நேர்ந்தாலும், வீட்டிற்கு பாரமாக இருக்கக்கூடாது என்று நினைத்து பிளாட்பாரத்திலும், நடைமேடையின் கீழேயும் மழை, வெயில் நனைந்தபடி வாழ்கின்றனர். பின்னர், உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஆதரவற்ற சடலங்களாக மீட்கப்படுகின்றனர்.

இறப்பவர்களின் விவரங்கள் தெரியாத நிலையில், சடலங்களை மீட்கும் ரயில்வே போலீசார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். இறந்தவரின் உடலை  கேட்டு உறவினர்கள் யாரேனும் வருவார்கள் என்று நினைத்து குளிர்பதன அறையில் பாதுகாத்து வைக்கின்றனர். தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் இறந்தவரைத் தேடி  யாரும் வராத நிலையில், ஆதரவற்ற சடலங்களை ரயில்வே போலீசார் மீட்டு பாலாற்றில் புதைத்துவிடுகின்றனர். இதற்கென அரசு சார்பில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு ₹2 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுபோன்று ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் சடலங்களை பெறும் ரயில்வே போலீஸ்காரர் நல்லடக்கம் செய்து மலரஞ்சலி செலுத்தி வருகிறார்.

அவரது பெயர் சற்குணன் (35). கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த இவர், காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி செய்து வருகிறார். காட்பாடி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் சடலங்களை அரசு நிதிஉதவியுடன் பாலாற்றில் நல்லடக்கம் செய்து வருகிறார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் ஆதரவற்ற சடலங்கள் மீட்கப்பட்டால் சற்குணன் தானாக முன்வந்து சடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியை மேற்கொள்வார். இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்ட சடலங்களை பாலாற்றில் அடக்கம் செய்து மலரஞ்சலியுடன் மரியாதை செலுத்தி வருகிறார். விரைப்பாக வீறுநடை போடும் காக்கிகளுக்கும் நல்மனது உண்டு என்பதை இந்த காவலர் நிரூபித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் பாராட்டுகின்றனர்.

Related Stories: