சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை  பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னை அம்பத்தூர், கொரட்டூர், பட்டபிராம், மாங்காடு, செம்பரபாக்கம்,  திருவேற்காடு, மதுரவாயல், குன்றத்தூர், திருநின்றவூர், பூவிருந்மவல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோல், தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்  பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விழுப்புரம் என  தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.

இதற்கிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழகம் வரையிலான வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 2  நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 13  மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ, கடலூரில் 13 செ.மீ, அரியலூரில் 12 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11  செ.மீ, விழுப்புரம் 10 செ.மீ, சென்னையில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.சென்னையை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணிநேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய  இயக்குனர் புவியரசன் கூறினார்.

Related Stories: