×

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்?: உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டது

டெல்லி: டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. அவருக்கு உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட  நடவடிக்கைகளை  பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். அண்மைக்காலமாக ஜெட்லி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஜெட்லியின் பொறுப்பு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது. உடல்நிலை பாதிப்பு காரணமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் ஜெட்லி போட்டியிடவில்லை.   இந்நிலையில், கடந்த 9ம் தேதி திடீரென அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு   அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தார். இரவு 11.15 மணியளவில், அமித்ஷா, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இந்தநிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், ஹர்சவர்தன், விமானப்படை தளபதி தனோவா, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர்.

Tags : Former Union Finance Minister Arun Jaitley's health continues to be a concern
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...