×

2018ம் ஆண்டு வரை 32 மாவட்டமாக இருந்த நிலையில் தமிழகத்தில் 7 மாதத்தில் புதிதாக 5 மாவட்டம் உதயம்: பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள்... யாருக்கு லாபம்?

* புதிய மாவட்டங்களை பிரிக்கும்போது, அந்த  மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, புதிய பஸ் நிலையம், சாலை போக்குவரத்து,  அரசு அலுவலகங்கள் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
*புதிதாக ஒரு மாவட்டத்தை அறிவிப்பதற்கு முன்னதாக, அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

சென்னை: தமிழகத்தில் 2018ம் ஆண்டு இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த 7 மாதத்தில் புதிதாக 5 மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி, மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை  அறிவிப்பதால் பொதுமக்களுக்கு லாபமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லாபமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன்படி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல்,  நீலகிரி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 32 மாவட்டங்களாக இருந்தது.இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக  கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, ஜனவரி 8ம் தேதி) தமிழகத்தின் 33வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது.

அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த 15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இப்படி, கடந்த 7 மாதத்தில் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றாலும், புதிதாக மாவட்டங்களை பிரிப்பதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாக பிரிப்பது மக்கள்தொகை அடிப்படையில் அல்லது தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளை பிரித்து புதிய  மாவட்டங்களாக அறிவிக்கப்படுகிறது. இப்படி புதிய மாவட்டங்களாக அறிவிக்கும்போது, அரசு அங்கு கூடுதல் கவனம் செலுத்தி, தாராளமாக நிதிகளை ஒதுக்கி அந்த மாவட்டங்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இப்படித்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடியில் அப்போது அதிகளவில் இருந்த சிறிய தொழிற்சாலைகள் தற்போது இல்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு  வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. இதற்கு அரசு அங்குள்ள தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்த உரிய முக்கியத்துவம் அளிக்காததே காரணம். இன்னும் சொல்லப்போனால், தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி  விட்டது. அங்கு புதிதாக ஒரு பஸ் நிலையம்கூட இன்னும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து வசதிகளும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை. தற்போதுகூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு புதிய  மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்து வந்தது. தற்போது, செங்கல்பட்டு புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு விட்டதால், இந்த மாவட்டத்திற்கு புதிய  தொழிற்சாலைகள் வர தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உயர்வு கிடைக்கும்.

அதேபோன்று, மீண்டும் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அறிவிக்கப்பட்ட சில நாட்களில் தற்போது வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை,  திருப்பத்தூர் என இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி 7 மாதங்களில் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு தமிழக  அரசு என்ன திட்டங்களை அறிவிக்கப்போகிறது என்பதே அந்த பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. இப்போதெல்லாம், ஒரு மாவட்டம் பிரிக்கப்படுகிறது என்றால், அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறதா? என்பதே கேள்விக்குறி தான். ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினாலே மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி மாவட்டங்கள் பிரிப்பதால் அரசியல்வாதிகளுக்கும், வருவாய் மாவட்டங்கள், வட்டங்களை பிரிப்பதால் புதிதாக நியமிக்கப்பட உள்ள அரசு அதிகாரிகளுக்கும்தான் லாபம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதனால், தமிழக அரசு இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல், புதிய மாவட்டங்களை பிரிக்கும்போது, அந்த மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, புதிய பஸ் நிலையம், சாலை போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. புதிதாக ஒரு மாவட்டத்தை அறிவிப்பதற்கு முன்னதாக, அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அப்படி இல்லாமல் மாவட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களிடம் கருத்து கேட்கப்படும் நிலை உள்ளது. இதுபோன்று இல்லாமல், பொதுமக்களின் தேவையை அறிந்து இனி புதிய மாவட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கையாகும் என்றனர்.


Tags : Civilians, politicians, officials
× RELATED நாகையில் பொதுமக்கள் தாக்கியதில் வீடு...