கடும் நிபந்தனைகளால் அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை அந்தரத்தில் தொங்கும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியாத்தம்: கடும் நிபந்தனைகளால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள சர்க்கஸ் கலையால், அதை நம்பியிருக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் அவர்களின் பார் விளையாட்டை போலவே அந்தரத்தில் தொங்கி ஊசலாடிக்  கொண்டிருக்கிறது.தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டு ஊர் ஊராய் சென்று கழைகூத்தாடிகள் என்ற நாடோடி கூட்டம் ஒன்று கயிற்றின் மீது நடப்பது போன்ற சாகசங்களை செய்து பொதுமக்களிடம் கையேந்தி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தன.  கழை கூத்தாடிகள் செய்த சாகசம்தான் பல பேர் ஒன்று சேர்ந்து மிருகங்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டு சாகசங்களை செய்து காட்டும் சர்க்கஸ் என்ற நிலையை எட்டியதாக கூறலாம். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளிலும்,  ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க நாடுகளிலும் சர்க்கஸ் கம்பெனிகள் தோன்ற ஆரம்பித்தன. அதன் வழியையொட்டி இந்திய சர்க்கஸின் தாய் வீடாக கேரள மாநிலம் தலச்சேரியில் முதல் சர்க்கஸ் கலைஞர்களுக்கான பயிற்சியை அந்த  ஊரை சேர்ந்த குன்னிக்கண்ணன் என்பவர் 1881ம் ஆண்டு தொடங்கினார்.

சர்க்கஸ் நடக்கும் பகுதிகளில் அது எப்பேர்பட்ட ஹீரோவின் படம் என்றால் கூட சினிமா தியேட்டர்களில் மக்கள் கூட்டம் வெறிச்சோடிக் காணப்படும். அந்தளவுக்கு சர்க்கஸ்களின் தாக்கம் இருந்தது. ஆனால் அந்த நிலை இன்று இல்லை. சர்க்கஸ்  கூடாரங்கள் 10 நாட்கள் கூட ஒரு ஊரில் காட்சிகள் நடத்துவது அரிதாகி போயுள்ளது. அண்மை காலங்களில் சாகச கலையை கற்க புதிதாக யாரும் வருவதில்லை என்ற நிலை ஏற்பட்டு வருவதால் மெல்ல மெல்ல சர்க்கஸ் கலைகளும் அழிந்து  வருகிறது. பொதுவாக சர்க்கஸ் கம்பெனிகளில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நேபாளம், பூடான் சீனா, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் மொழியோ, மதமோ என்றுமே ஒரு பிரச்னையாக மாறியதில்லை. உண்மையில் சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த ஒரு கூடாரமாகவே சர்க்கஸ் கூடாரங்கள் விளங்கின. இத்தகைய சர்க்கஸ்  கூடாரங்கள் இன்று காற்று வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு படிப்படியாக சர்க்கஸ் கம்பெனிகள் மூடப்பட்டு வரும் நிலையில் உளளது. எனவே, அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் சர்க்கஸ் கலையை காப்பாற்றவும், சர்க்கஸ் கலைஞர்களின்  வாழ்க்கையை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்க்கஸ் கலைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கூறியதாவது: ஒரு சர்க்கஸ் குழுவில் குறைந்தது 50 முதல் 100 பேர் வரை இருப்போம். இவர்களுக்கான ஊதியம், அன்றாட உணவு, இதர செலவினங்கள்,  போக்குவரத்து, தங்குமிடம் என மாதந்தோறும் ₹50 லட்சம் வரை செலவாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த அளவுக்கு வருவாயை ஈட்ட முடியாத காரணத்தால், பல சர்க்கஸ் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன. நாட்டில் 300க்கும் மேற்பட்ட  சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. நமது நாட்டில் அமலில் உள்ள மிருக வதை தடுப்புச் சட்டத்தால், சிங்கம், புலி, கரடி போன்ற வனவிலங்குகள் இப்போது சர்க்கஸ்  காட்சிகளில் முழுமையாக இடம் பெறவில்லை. இதனால் வருவாய் குறைந்து விட்டது. எங்களுக்கு பிறகு எங்கள் வம்சாவழியினர் இந்த தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதோடு புதியதாக சர்க்கஸ் கலையை  கற்று கொள்ளவும் எவரும் முன்வருவதில்லை. இந்த நிலையில், சர்க்கஸ் கலையையும், சர்க்கஸ் கலைஞர்களையும், சர்க்கஸ் கம்பெனிகளையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு  அவர்கள் கூறினர்.

Related Stories: