×

அரசிடம் நெல்லை வாங்கி நல்ல விலைக்கு விற்று விட்டு ரேஷன் அரிசியை வாங்கி அனுப்பும் கில்லாடி அரிசி ஆலைகள்: கண்டும் காணாத அதிகாரிகள்

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச அரிசி திட்டத்திற்காக வாங்கப்படும் நெல்லைக் கடத்திவிட்டு, அதற்குப் பதிலாக ரேஷன் அரிசியை வாங்கி மீண்டும் ரேஷன் அரிசியாகவே விற்கும் கில்லாடிகளின் வேலையால் உணவுப்பொருள்  கடத்தல் தடுப்பு பிரிவு திகைத்து நிற்கிறது. ஒரு காலத்தில் ரேஷன் அரிசி டிரைசைக்கிளில் கடத்தப்பட்டது. அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வேன், கார், லாரி என ஆரம்பித்து கடைசியில் புறநகர் மின்சார ரயில்களில் கடத்தும் அளவிற்கு  கடத்தல்காரர்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது. தற்போது பழவேற்காடு பகுதியில் இருந்து படகுகளிலும் ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருகிறது.இப்படி ரயில் மற்றும் படகுகளில் ரேஷன் அரிசி ஏன் கடத்தப்படுகிறது என்றால், வெளி  மாநிலங்களுக்கு நல்ல விலையில் விற்பதற்காக, இந்த அரிசியைக் கடத்துகிறார்கள் என நினைப்போம். ஆனால், புதிய உத்தியை ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசியை இலவசமாக தருவதற்காக விவசாயிகளிடம் சுமார் 17 லட்சம் டன் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு  விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல்லை அரைத்து அரிசியாக்க, தனியார் ஆலைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நெல்லை அரைத்து தான் ரேஷன் அரிசிக்குப் பயன்படுத்துகிறார்கள்.  இதற்காக தமிழகம் முழுவதும் சில ஆலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பல ஆலைகளுக்கு இப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு வழங்கும் நெல்லை அதிக விலைக்கு  விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக ரேஷன் அரிசியை வாங்கி, அரசுக்கு மீண்டும் ரேஷன் அரிசியாக அனுப்பும் புது உத்தியைக் கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல்லை ஆலைகளுக்கு அளிக்கும்போது,  அதை அரைத்து தரமான அரிசியை அரசிடம் வழங்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன. இந்த அரிசி தான் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் நெல்லை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக  ரேஷன் அரிசியை வாங்கி, தாங்கள் தயாரிக்கும் அரிசியோடு இந்த அரிசியைக் கலந்து கணக்கு காட்டுகிறார்கள்.

ஒரு அரிசி ஆலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 1 லாரி நெல் மட்டுமே தயார் செய்ய முடியும். ஆனால், இந்த ஆலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 லாரி நெல் வழங்கப்படுவதால் இதை அரைப்பதற்குப் பதில், வெளி மார்க்கெட்டில் நல்ல  விலைக்கு இந்த நெல்லை விற்றுவிட்டு, அதற்குப்பதில் ரேஷன் அரிசியை வாங்கிக் கலந்து விடுகிறார்கள். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் அதிக அளவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக்  கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, வருவாய்த்துறையின் பறக்கும் படை இந்தக் குற்றத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே உள்ளது. ரேஷன்  அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என அரசு கூறுகிறது. ஆனால், ஆளுங்கட்சியினரின் ஆசியோடு அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’தமிழகத்தில் மோசடி செய்யும் தனியார் அரிசி ஆலைகள் மூலம், பல கோடி ரூபாய் பணம் அதிகாரிகளுக்கு கைமாறுவதாக கூறப்படுகிறது. எனவே, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க 5 கிலோ  பைகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும். தனியார் அரிசி ஆலைகளைக் கண்காணிக்க தனிப்பிரிவு துவக்கப்பட வேண்டும். அத்துடன் தனியார் ஆலைகளின் மின்சாரத்தினை கணக்கீடு செய்தால் அவர்கள் எவ்வளவு நெல் அரைத்துக்  கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதுவரை அரிசியை நெல்லாக்கும் கில்லாடிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது’’ என்றனர்.



Tags : Government, Paddy, Ration Rice, Rice Mills
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...