×

எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்க பேட்டரி சைக்கிள் தயாரித்து அசத்தும் ஓய்வு சப்-இன்ஸ்பெக்டர்: பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு

வேலூர்: எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் குறைந்த பொருட்ச் செலவில் பேட்டரி சைக்கிள் தயாரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அசத்துகிறார் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
வேலூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் என்று பெயரெடுத்தவர் சண்முகம்(64). 2014ம் ஆண்டு காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றார். காவல் பணியில் இருக்கும்போதே அறிவியல் தொடர்பான புதிய  கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் செய்து வந்துள்ளார். தொடக்கத்தில் பழுதான டியூப் லைட்களை மீண்டும் எரியவைப்பது என தொடங்கியவரின் புதிய கண்டுபிடிப்புகளான தேடுதல் வேட்டை மின்சாதன பொருட்களுக்கு பயன்படுத்தும் சர்க்யூட்  போர்டுகள் தயாரிப்பதில் வந்து நின்றது. முதற்கட்டமாக அலங்கார விளக்குகளுக்கு தேவையான சர்க்யூட் போர்டுகள், செல்போன் சார்ஜர் ஆகியவற்றை சொந்தமாக பொருட்கள் வாங்கி தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.  பின்னர், மக்களுக்கு பயன்படும் வகையில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டும், என்று ஆர்வம் கொண்டார்.

அதில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ, வேன், பஸ்களில் ஏற்றி அனுப்பிவைக்கின்றனர். அதற்கு மாற்று ஏற்பாடாகவும், பொருளாதார சிக்கனத்தை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல்  மாசுபாடுகள் ஏற்படாத வகையிலும் கண்டுபிடிக்க முடிவு செய்தவர் தற்போது பேட்டரி சைக்கிள் தயாரித்துள்ளார். மேலும், இந்த பேட்டரி சைக்கிள்களை குறைந்த பொருட்செலவில் தேவைப்படுவோருக்கு தயாரித்து கொடுத்து விற்பனை செய்து  வருகிறார்.இதுகுறித்து சண்முகம் கூறுகையில், அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளில் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி, பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் வகையில் பேட்டரி சைக்கிள் தயாரிக்க  முடிவு செய்தேன். 17ஆயிரம் செலவில் சாதாரண சைக்கிளை பேட்டரி சைக்கிளாக மாற்றலாம்.

இந்த சைக்கிளின் நடுவே 24 வோல்ட் லித்தியம் பேட்டரியும், பின்சக்கரத்தில் 250 வாட் கியர் மோட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. 4 மணிநேரம் சார்ஜ் செய்தால் 40கி.மீ வரை பயணிக்கலாம். 17 ஆயிரம் பொருட்செலவில் இந்த சைக்கிளை பேட்டரி  சைக்கிளாக மாற்றலாம். இதனால் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசு போன்ற பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த சைக்கிள் தயாரிப்பை மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்தால் மேலும், சிறப்பாக செய்ய முடியும், என்றவர், தான்  தயாரித்த பேட்டரி சைக்கிளை கோட்டை மைதானத்தில் ஓட்டிக் காட்டினார், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்றபடி உற்சாகமாக பேட்டரி சைக்கிளில் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தார்.

Tags : Fuel cost, environmental pollutants, leisure sub-inspector, public
× RELATED 2 ஒன்றிய அமைச்சர், துணை முதல்வர், எம்பி,...