சோதனையில் வெடித்தது அணுசக்தி ஏவுகணை 16 மடங்கு கதிர்வீச்சால் பரபரப்பு பாதிப்பு இல்லை என்கிறது ரஷ்யா

* உலக நாடுகளுக்கு தெரியாமல் உண்மையை மறைக்கிறதா?

* எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் செவரோட்வின்ஸ்க்.  நிர்வாக  மையமான ஓபிளாஸ்ட்டின் அர்கான்ஜெல்ஸ்க் நகரின் மேற்கு பகுதியில் உள்ளது  இந்நகரம். சுமார் 2 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.  ‘ஒயிட் சீ’  கடல்  பகுதியான நயோனக்சா அருகே (30 கி.மீ. தொலைவில்) கடற்படையின் ஏவுகணை ஆய்வு  மையம் உள்ளது. இந்த மையத்தில் புதிய ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை  அவ்வப்போது நடக்கும். கடந்த 8ம் தேதி இந்த ஆய்வு  மையத்தில் பெரும் வெடி  சப்தம் கேட்டது. வெடி சப்தம் கேட்ட சில மணி நேரத்தில், 40 கி.மீ.  தொலைவில் செரோட்வின்ஸ்க் நகரின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. காரணம்,  திடீரென அணு கதிர்வீச்சு ஏற்பட்டதுதான். நேரம் செல்லச்  செல்ல அதன் தாக்கம்  அதிகரித்தது. சாதாரண நிலையைவிட 16 மடங்கு கூடுதலாக இருந்ததாக  கூறப்படுகிறது. அணுக்கதிர்வீச்சின் தாக்கத்தை அயோடின் ஓரளவு கட்டுப்படுத்தும்  என்பதால் அயோடின் மருந்தை வாங்கி சாப்பிடுமாறு  அறிவிக்கப்பட்டது . சிறிது நேரத்தில் மருந்து  கடைகளிலும் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில்  செவரோட்வின்ஸ்க் நகரின் நலத்துறை இணையதளத்தில் இருந்து மக்களுக்கு  எச்சரிக்கை விடப்பட்ட தனது அறிவிப்பை விலக்கிக்கொண்டது. வழக்கம்போல் விஷயத்தை  மூடி மறைக்கும் பணியில் ரஷ்யா ஈடுபட்டது.

ஏவுகணை வெடிப்புக்கும்  கதிர்வீச்சுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை அணு ஆயுதத்துடன் ஏவுகணை  வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டதா என்பன போன்ற கேள்விகள் உலக  நாடுகளிடையே எழத் தொடங்கின.

கடந்த ஆண்டு ரஷ்ய நாடாளுமன்றத்தில்  அதிபர் விளாடிமீர் புடின் ஆற்றிய உரையில், இதுவரை இல்லாத புதிய வகை  ஏவுகணைகள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். அவர் குறிப்பிட்ட இதுவரை இல்லாத  புதிய வகை என்பது ஏவுகணைகளுக்கான  எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்துவதுதான். வழக்கமாக அணு ஆயுதங்களை  சுமந்து செல்லும் ஏவுகணைகளை அணுசக்தி அல்லாத திரவ, திட எரிபொருட்கள் கொண்டு  இயக்குவதுதான்  வழக்கம்.

தற்போது எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்தும்  தொழில்நுட்பத்தில் ரஷ்யா இறங்கியுள்ளது. இதன் நோக்கம் தொலை தூரத்தில் உள்ள  இலக்கையும் குறிவைத்து தாக்கி அழிக்கலாம் என்பதுதான்.

இந்த  ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால், அது, அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக  இருக்கும். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘எந்த நிலையையும்  சந்திக்கவும், எதிரிகளின் ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்கும் புதிய  ஆயுதங்களை  கண்டுபிடிப்பதிலும் தாங்கள் முன்னணியில் உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.  அதாவது ரஷ்யாவின் எந்த சவாலையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக  டிரம்ப் கூறியுள்ளார் என்று உலக ஆயுத நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.

ஒன்று போதும் பஸ்பமாக்க...

அணு ஏவுகணை தாக்குதல் நடந்தால் கதிர்வீச்சு கட்டாயம் இருக்கும். ஏவப்பட்ட  வினாடியில் இருந்து பாதிப்பு தொடங்கிவிடும். வருங்காலத்தில் ஏவுகணைகள்  சுமந்து வருவது மட்டும் அணு ஆயுதமாக இருக்காது. ஏவுகணைகளே அணு  ஆயுதமாக  இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் ஆர்டிஜி எனப்படும் மிகச்சிறிய வகை  அணுசக்தி ராக்கெட்டுகள். இதில் அணுக்கழிவுகள் வெளியேறுவது இல்லை. அணுக்களை  பிளந்தோ, இணைத்தோ உருவாகும் வெப்ப சக்தியை வைத்து  மின்சாரத்தையோ  ஏவுகணைக்கான உந்து சக்தியையோ உற்பத்தி செய்யும்போதுதான் அணுக்கழிவுகள்  வெளியேறும். ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் ஆர்டிஜி தொழில்நுட்பத்தில்  அணுவை பிளப்பதோ, இணைப்பதோ இல்லை. ஆனால்,  ஏவுகணைகளை செலுத்த ஆர்டிஜி  தொழில்நுட்பம் போதாது, மிகப்பெரிய அளவிலான அணுசக்தி பூஸ்டர்கள்  தேவைப்படும். இங்கேதான் அணு கதிர்வீச்சு கொண்ட கழிவுகள் வெளியேறுகின்றன.

இது  எல்லாம் தெரிந்துதான் ரஷ்யா இந்த வகை ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் ரஷ்யா ஏன் இதைச் செய்ய  வேண்டும். அதற்கு காரணம் அமெரிக்காவின் தல அதிகாரம்தான். இந்த  ஏவுகணைகளை  எதிரி நாட்டின் மீது ஒன்றை ஏவினால் போதும், பல கி.மீ. தூரம் பஸ்பமாகி  விடும். அங்கு புல், பூண்டு கூட இருக்காது. திரும்பவும் முளைக்க பல  ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

வெடித்தது என்ன? கதிர்வீச்சு ஏன்?

* ரஷ்ய பாதுகாப்பு துறை விளக்கம்: புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதில், திரவ எரிபொருள் ஏற்றப்பட்ட ஒரு ஏவுகணை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5  பொறியாளர்கள் இறந்தனர்.

* ரஷ்ய அணு ஆராய்ச்சி நிறுவனம் ரோஷடோம் விளக்கம்: புதிய ஏவுகணை தயாரிக்கப்பட்டது. அதில் ஏவுகணைக்கான திரவ  எரிபொருளில் அணுசக்தியை பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்த 5  பொறியாளர்கள் இந்த விபத்தில்  பலியாகிவிட்டனர்.

* அர்கான்ஜெல்ஸ்க் பகுதி கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மையம் பதிவு செய்த கதிர்வீச்சு 4 முதல் 16 என்ற அளவில் இருந்தது.

* ரஷ்யாவின் அணுசக்தி ஏஜென்சியின் தலைவர், புதிய ஏவுகணை தயாரிப்பு பணி நடந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் விஞ்ஞானிகள் பலியானதை உறுதி செய்துள்ளார். விபத்து ஒரு பக்கத்தில் நடந்தாலும் இந்த ஆய்வு பணி தொடரும் என்றும்   கூறினார்.

Related Stories: