×

5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரிக்க தனியாருக்கு இஸ்ரோ அழைப்பு: 1,000 கோடி மதிப்பீட்டில் திட்டம்

பெங்களூரு: இஸ்ரோ நிறுவனம் முதல்முறையாக 1000 கோடி மதிப்பில் 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு பல்வேறு செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  முதல் முறையாக ராக்கெட்டான பிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ பல்வேறு தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களிடம் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான உதிரிபாகங்கள் மற்றும் பல்வேறு கருவிகள் தயாரிக்க  அனுமதி கொடுத்தது.

அந்த வகையில் இஸ்ரோவிற்கு இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ராக்கெட்டுக்கு தேவையான கருவிகள் கொண்டு வரப்பட்டது. அதை கொண்டு இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் கட்டுமானத்தை விஞ்ஞானிகளை வைத்து  உருவாக்கி விண்ணில் ஏவி வந்தது. அந்த வகையில் இஸ்ரோ இதுவரை 48 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது. இதில் இரண்டு ராக்கெட்டுகள் ஏவும் பணி தோல்வியில் முடிந்தது. ஒன்று பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில்  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடம், போர் விமானங்கள் போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதில் ரபேல் போர் விமான தயாரிப்பும் அடங்கும்.
இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை முழுமையாக தயாரித்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வாங்க இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி இந்திய வரலாற்றில் முதன்முறையாக 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டு தயாரிப்பை தனியாரிடம்  ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ என்ற முகமையை ஏற்படுத்தியது. இந்த முகமைதான் தனியாரிடம் பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் சார்பில் 5 ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 200 நிறுவனங்கள் இஸ்ரோவின் இந்த திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டியது. எனினும் ராக்கெட் தயாரிப்பில்  இஸ்ரோவிற்கு துணையாகவும் அனுபவம் உள்ள நிறுவனங்களான எச்ஏஎல் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் தேர்வாக உள்ளன. மற்ற நிறுவனங்கள் ராக்கெட்டுக்கு தேவையான உதிரிபாகங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  வழங்கும். அதன்படி ஒரு ராக்கெட் தயாரிக்க 200 கோடி என்ற வகையில் ₹1000 கோடியில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்து நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கும். பின்னர் அது  இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான திட்டம் கடந்த 6 மாதத்திற்கு முன் உருவாக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:  பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரித்து கொடுக்க ஆர்வமுள்ள நிறுவனங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அழைத்துள்ளோம். இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க இந்திய  நிறுவனங்களுக்கு மட்டுமே அதற்கான உரிமம் வழங்கப்படும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்க அனுமதி அளிக்க மாட்டோம். ஒரு ராக்கெட் தயாரிக்க எவ்வளவு திட்ட மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது என்பதை கூற முடியாது. அதை நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிர்ணயிக்கும். இத்தகைய வணிக நோக்கிலான திட்டங்களை அந்த முகமையே இனி கையாளும். இந்த திட்டத்தில் எச்ஏஎல், எல் அண்ட் டி நிறுவனங்கள்  ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளன. விரைவில் உற்பத்தி ெதாடங்கும். அதேபோல கோத்ரெஜ் உள்பட பல நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் சிறிய மற்றும் பெரியதுமான 150  நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றன. அதில் முக்கியமான பங்களிப்பு எச்ஏஎல் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் அளிக்கின்றன.

இதில் எச்ஏஎல் நிறுவனம் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு தேவையான 24 ஆர்டர்களை பெற்றுள்ளது. ஜிஎஸ்எல்விக்கான 2 ஆர்டர்களை பெற்றுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் கடந்த 1975ம் ஆண்டில் இருந்து இஸ்ரோவுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்து வருகிறது. அது திட எரிபொருள் பூஸ்டர்களை தயாரித்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்க திட்ட மதிப்பீடு ₹200 கோடியாகும். அந்த வகையில் 5 பிஎஸ்எல்வி ராக்கெட் 1000 கோடி  மதிப்பில் தயாரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இஸ்ரோ வரலாற்றில் ஒரு முழுமையான பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : 5 PSLV rockets, ISRO call
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...