காவிரி ஆற்றுப்படுகையை தூர்வாருவதை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் அலைக்கழிப்பு: 4 நாட்களாக காத்திருக்கும் அவலம்

சென்னை: காவிரி ஆற்றுப்படுகையை தூர்வாரும் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு பகுதி, பகுதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதியை கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை சார்பில் 20 உதவி பொறியாளர்கள், 15 உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட உதவி  பொறியாளர்கள் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பேரில் பொறியாளர் அங்கு சென்றால் அவர்கள் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் நடைபெறும்  தூர்வாரும் பணியை கண்காணிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டப்பகுதிகளில் உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் பொறுப்பேற்கச் சென்றனர். ஆனால், அங்கு பணி ஒதுக்கீடு செய்து எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை இதனால், மாற்றுப்பணிக்காக  நியமிக்கப்பட்ட ஊழியர்கள் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி  மாற்றுப்பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை ஊழியர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் காத்திருக்கின்றனர் என்று பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர். இது குறித்து பொறியாளர்கள் சிலர் கூறும் போது, ‘டெல்டா  பகுதிகளில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மாற்றுப்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுப்படுகையில்  தண்ணீர் வரும் நிலையில், ஏதாவது அசம்பாவிதம் சம்பவம் ஏற்பட்டால் எங்களை தான் இங்குள்ள பொறியாளர்கள் பொறுப்பாக்குவார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 

Related Stories: