வரத்து கால்வாய்கள் தூர்ந்துபோனதால் நீர்வரத்து நின்றது மழை பெய்தும் வறண்டு காணப்படும் பூண்டி ஏரி : அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி நீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதற்கு நீர்வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி, தற்போது முற்றிலும்  வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியது. நவம்பர் 16ம் தேதி பூண்டி ஏரியின் மொத்த நீர்மட்டமான 35 அடியில் 34 அடி வரை நிரம்பியதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அந்த நீரை தேக்கி வைக்க வசதியில்லாததால் வீணாகக் கடலில் கலந்தது.தொடர்ந்து, 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் அனைவரும் பருவ மழையை எதிர்பார்த்து தயாராக இருந்த நிலையிலும், மாவட்ட நிர்வாகம் பல கோடி செலவில் முன்னேற்பாடுகளை செய்த நிலையிலும் பருவ மழை பொய்த்துப் போனது. ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டன. இதனால், திருவள்ளூர் பகுதியிலும் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.

குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல், ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடந்தன.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது, ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. அந்தளவுக்கு ஏரி வறண்டு உள்ளது. நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராததே இதற்கு காரணம்.தண்ணீருக்கு ஆந்திர அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ஆந்திர நீர்வரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பூண்டி ஏரிக்குள் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அகற்றி, ஆங்காங்கே உள்ள மண் மேடுகளை தூர்வாரி அகற்றினால் மட்டுமே வரும் காலத்தில் முழுமையாக மழைநீரை சேமிக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், மழை நெருங்கும் வேளையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏரியை தூர்வாரி நீரை சேமிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: