முதல் நாள் சிறந்த போலீஸ் விருது மறுநாள் லஞ்சம் வாங்கியதாக கைது

திருமலை: தெலங்கானாவில் சுதந்திர தினத்தன்று சிறந்த காவலருக்கான விருது பெற்ற போலீஸ்காரர் மணல் வியாபாரியிடம் 17 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் மெகபூப் நகர் மாவட்டம், முதலாவது நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் திருப்பதி ரெட்டி. இவர், மணல் வியாபாரி ரமேஷ் என்பவரிடம் மணல் அள்ளுவதற்கு லஞ்சமாக 17 ஆயிரம் கேட்டு நேற்று முன்தினம் மிரட்டினாராம். இதற்கு ரமேஷ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தபோது, பொய் வழக்கு போடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டினாராம். இதனால் மனவேதனையடைந்த ரமேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறிய அறிவுரையின்பேரில் காவல் நிலையம் வெளியே ரமேஷ்,  காவலர் திருப்பதி ரெட்டியிடம் நேற்று முன்தினம் 17 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கினார். இதை பெற்ற காவலர் திருப்பதி ரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான திருப்பதி ரெட்டி கடந்த 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் பணியில் சிறந்த காவலர் என்று அமைச்சர் சீனிவாஸ் கவுடிடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: