வீட்டில் துப்பாக்கி, வெடிகுண்டு பதுக்கிய பீகார் சுயேச்சை எம்எல்ஏ மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

பாட்னா : வீட்டில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து பீகார் சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் சிங் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் மொகாமா சட்டப்பேரவை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் ஆனந்த் சிங். இவரது மூதாதையர் வீடு பார்த் பகுதியில் உள்ள லட்மா கிராமத்தில் உள்ளது. இங்கு துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிநவீன ஏகே 47 துப்பாக்கி, தோட்டாக்கள் வைக்கும் உறை, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. எம்எல்ஏ ஆனந்த் சிங் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராக இருந்தவர். முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு பலமுறை எம்எல்ஏவாக ஆனவர்.

அவர் கடந்த 2015ல் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். `குட்டி அரசாங்கம்’ என்ற பட்டப்பெயர் கொண்ட அவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த எம்எல்ஏ `இது திட்டமிட்ட சதி என்றும் இந்த ஆயுதங்கள் என்னுடையது அல்ல’ எனவும் தெரிவித்திருந்தார். அவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனை குறித்து தெரிவித்த பாட்னா புறநகர் எஸ்பி கந்தேஷ் குமார் மிஸ்ரா `பெரிய அசாம்பவிதத்தை நடத்துவதற்காக இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவித்தார். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆனந்த் சிங் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபரை தீவிரவாதியாக அறிவித்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ மீதான உபா வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Stories: