தீவிரவாதிகள் தாக்குதல் பீதி எதிரொலி கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு : அச்சம் வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தல்

பெங்களூரு: நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை மூலம் மாநில அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளதால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹிஜ்புல் முஜாஹீதின் மற்றும் சையத் சலாவூதின் ஆகிய அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் யுனெடெட் ஜிஹாத் கவுன்சில் (யுஜெசி) என்ற அமைப்பு பெங்களூரு உள்பட நாட்டில் முக்கிய நகரங்களில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவசர தகவல் மத்திய உளவுத்துறை மூலம் கர்நாடக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உஷாரான கர்நாடக போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி நீலமணி என்.ராஜு உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் அவசர கூட்டத்தை நேற்று கூட்டினார். சுமார் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியபின், போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பெங்களூருவில் உள்ள விதானசவுதா, விகாஷ்சவுதா, கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், இஸ்ரோ உள்ளிட்ட மத்திய அரசின் தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கி வரும் ராணுவ, விமான, விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகரில் துணை மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டார்கள். எப்போதுமில்லாத வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலையில் வந்த மாணவர்களை சோதனை செய்த பின் போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க கர்நாடக ஆயுதப்படை மற்றும் சி.ஏ.ஆர். போலீஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மட்டுமில்லாமல் மைசூரு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம், சாமுண்டீஸ்வரி கோயில், அரண்மனை, மற்றும் சுற்றுலா தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மங்களூருவில் மத்திய அரசு துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு காரில் சுற்றித்திரிந்த 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். மாநில அரசு தேவையான பாதுகாப்பு வழங்கும்’’ என்றார்.

Related Stories: