×

இந்தியா - பூடான் 10 ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்து

திம்பு : அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி,  அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மோடி  இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பின், முதல் முறையாக இரண்டு நாள்  அரசுமுறை பயணமாக நேற்று பூடான் சென்றார். அங்கு அவரை பரோ சர்வதேச விமான  நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்  வரவேற்றார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து தலைநகர் திம்புவிற்கு  புறப்பட்டு சென்றார்.  
இந்த பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக அவர்,  பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து,  அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் உடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை  திறந்து வைத்தார். பின்னர் நீர் மின் உற்பத்தி துறையில் இந்தியா - பூடான்  இடையிலான 50 ஆண்டு கால உறவை விளக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டார்.  இஸ்‌ரோ அமைத்துள்ள ஆய்வுக் கூடத்தையும் திறந்து வைத்தார்.

அதன்  பின்னர், விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம்,  மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகின. இதையடுத்து பூடான் பிரதமருடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியின்போது பிரதமர் மோடி பேசியதாவது: பூடானில் `ரூ பே’ கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி  அடைகிறேன். பூடானின்  வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக  பூடானுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு இனியும் தொடரும் என்றார். மேலும்  பிரதமர் மோடி பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நமக்யல் வாங்சக்கை சந்தித்து  இருதரப்பு உறவுகளை  வலுப்படுத்துதல், மேம்படுத்துதல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.இன்று புத்த மடத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் கலந்து  கொள்ளும் அவர், ராயல் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.

Tags : India - Bhutan 10 signing, Modi's presence
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...