பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு

ஜம்மு: காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோவ்ரி மாவட்டங்களில்  பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும், 10 நாளே ஆன குழந்தையும் கொல்லப்பட்டனர். பொதுமக்களும் காயம் அடைந்தனர்.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காஷ்மீரையொட்டிய  எல்லைக் கட்டுப்பாடு  பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 6.30 மணியளவில் திடீரென பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. ரஜோவ்ரி மாவட்டம் நவ்ஷேரா செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் சிறு ராக்கெட்களை கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் பெயர் சந்தீப் தபா (35) என்பதும், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் யாரும் உயிரிழந்தார்களா என்பது குறித்த தகவல் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

Related Stories: