பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால் மக்களை விட்டு அதிகாரிகளை உதைக்கச் செய்வேன் : நிதின் கட்கரி எச்சரிக்கை

நாக்பூர்: சிவப்பு நாடா முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மக்களை விட்டு உதைக்கச் செய்வேன் ’’ என்று சில அதிகாரிகளை தான் எச்சரித்து இருப்பதாக கூறினார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) உள்ளிட்ட பல துறைகளை கவனித்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ‘லாகு உத்யோக் பார்தி’ என்ற நிறுவனம் நேற்று நாக்பூரில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஏராளமான தொழில்முனைவோரும் கலந்து கொண்டனர்.  மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி, அச்சமின்றி தங்களது தொழிலை விரிவுபடுத்தும்படி தொழில்முனைவோரை கேட்டுக் கொண்டார். மேலும் அரசு அதிகாரிகளால் தொழில்முனைவோர் துன்புறுத்தப்படுவது குறித்தும் குறிப்பிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

சிவப்பு நாடா முறை ஏன் இன்னும் இருக்கிறது? அதிகாரிகள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள்? அவர்கள் ஆய்வுக்காக வருகிறார்கள். லஞ்சம் வாங்குகிறார்கள். நான் அவர்களுக்கு நேரடியாகவே சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். மக்களுக்கு நான்தான் பதில் சொல்லியாக வேண்டும். நீங்கள் திருடினால் உங்களை திருடன் என்றுதான் சொல்லுவேன். இன்று, இங்குள்ள ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளை சந்தித்ேதன். அப்போது போக்குவரத்து கமிஷனர் மற்றும் இயக்குனரும் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு இன்னும் எட்டு நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர்களிடம் நான் கூறினேன். அப்படி செய்யாவிட்டால் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அவர்களை உதையுங்கள் என்று மக்களிடம் நானே சொல்வேன் என்று எச்சரித்துள்ளேன்.

எனது ஆசிரியர்களும் இதைத்தான் எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். நீதியை வழங்காத சிஸ்டத்தை தூக்கி எறியும்படி அவர்கள் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார். எதையும் நேரடியாக துணிச்சலாக எடுத்துரைக்கும் மனப்பாங்கு கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி, அந்த குறிப்பிட்ட பிரச்னை என்ன என்பதை தெரிவிக்கவில்லை.

Related Stories: