இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம் முக்கிய சவால் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

வர்தா: ‘‘இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம் முக்கிய சவாலாக உள்ளது. ஆனால் இதை எதிர்க்கொள்ளும் வகையில் பல திட்டங்களை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் நேற்று நடந்த பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் நம் நாட்டில் உள்ளனர். உலகளவில் உள்ள நோய்களிலும் 20 சதவீதம் இங்குதான் உள்ளது. தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்கள், புதிய நோய்கள் என மூன்று விதமான சவால்களை நாம் எதிர்க்கொள்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம் முக்கிய பகுதியாக உள்ளது. போதிய சுகாதார வசதிகள் கிடைக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, வெப்ப மண்டல நோய்கள் போன்றவை சவால்களாக உள்ளன. இவற்றை எதிர்கொள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் உட்பட இதர சுகாதார திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நமது பிரச்னைகள் சிக்கலானது. இவை சமூக பொருளாதார சவால்களுடன் பின்னி பிணைந்துள்ளன.

இந்த மருத்துவ அறிவியல் மையம், கடந்த 50 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை வைத்தியத்தின் மீது மகாத்மா காந்தி நம்பிக்கை வைத்திருந்தார். சுகாதாரத்தையும், சமூகத்தையும் ஒருங்கிணைக்கும் உங்கள் முயற்சியில் நமது இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இங்குள்ள மருத்துவ மாணவர்களும், ேபராசிரியர்களும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான், அதிகளவிலான மருத்துவ அறிவையும், அனுபவத்தையும் கற்றுக் கொள்ள முடியும். இ-ஆரோக்கியபாரதி திட்டம் மூலம் ஆப்ரிக்காவில் உள்ள டாக்டர்களுக்கு நாம் டெலி மருத்துவ படிப்புகளை வழங்குகிறோம். இந்தியா தற்போது உலக மருந்தகமாக கருதப்படுகிறது. நமது தரமான மற்றும் விலை குறைவான மருந்துகள் பலருக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்களை பகிர்ந்து கொள்வதில் உள்ள நமது முயற்சிகள் இன்னும் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: