காஷ்மீரில் கட்டுப்பாடு தளர்வு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தரைவழி இணைப்பு போன் சேவைகள், 2ஜி இன்டர்நெட் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5ம் தேதி  ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் போராட்டத்தை தூண்டலாம் என்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களின் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வீண் வதந்திகள் பரவி போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் போன் சேவைகள், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், காஷ்மீர் மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 35 காவல் நிலைய பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு படையினர் தடுப்புகளுடன் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அடையாள அட்டைகளை சோதித்தபின், மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நகரில் சில கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. எங்கும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

மீண்டும் போன் சேவைகள்

காஷ்மீரில் மொத்தம் 100 டெலிபோன் எக்ஸ்சேஞ்கள் உள்ளன. இவற்றில் 17 எக்ஸ்சேஞ்களில் தரைவழி இணைப்பு  சேவைகள் நேற்று மீண்டும் செயல்படுத்தப்பட்டன.  மத்திய காஷ்மீர் பகுதியில் பத்காம், சோனாமார்க் மற்றும் மணிகாம் பகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் குரேஷ், தங்மார்க், உரி கென் கர்னா மற்றும் தாங்தர் பகுதிகளிலும், தெற்கு காஷ்மீரில் காசிகுந்த், பகல்காம் ஆகிய பகுதிகளில் தரைவழி இணைப்பு போன் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன. ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர் மற்றும் ரியாசி மாவட்டங்களில் குறைந்த வேகத்துடன் செயல்படும் 2ஜி இன்டர்நெட் சேவைகள் வழங்கப்பட்டன. காஷ்மீரில் நிலைமை சீரடைந்தபின் அங்கு 3ஜி, 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போது முடிவுக்கு வரும்?: ராகுல் காந்தி ஆவேசம்

காஷ்மீர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்னதாக ஜம்முவில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், தலைமை செய்தி தொடர்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.சியுமான சர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘‘இந்த பைத்தியகாரத்தனம் எப்போது முடிவுக்கு வரும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘காஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதாகவும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை மக்கள் கொண்டாடுகின்றனர்  என மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. ஆனால் எதிர்க்கட்சி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. அரசின் இரட்டை பேச்சு, பல முறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: