ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் 87 கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது

திருமலை: ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் 87 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று கவர்னர் ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக ஆந்திராவின், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சைலம் அணை நிரம்பி நாகார்ஜுன சாகர், புலிசெந்துலா அணைகள் நிரம்பி விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி 8 லட்சத்து 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தபடி உள்ள நிலையில் அது அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணா மாவட்டத்தில் 18 மண்டலங்களில் உள்ள 34 கிராமங்களிலும், குண்டூர் மாவட்டத்தில் உள்ள 14 மண்டலத்தில் 53 கிராமங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மொத்தம் 32 மண்டலங்களில் 87 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் 140 தீயணைப்பு வீரர்கள், 10 மண்டலங்களில் 18 படகுகளை கொண்டு புனரமைப்பு  மையங்களுக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விஜயவாடா, குண்டூர் மாவட்டத்தில் 180 என்டிஆர்எப் வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 32 மருத்துவ மையம்,  குண்டூர் மாவட்டத்தில்  22 மருத்துவ மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 14 ஆயிரத்து 413 உணவு பொட்டலங்கள், 42 ஆயிரம் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளநீர் சூழ்ந்து  பாதிக்கப்பட்ட கிராமங்களை மாநில கவர்னர் பிஸ்வ பூஷண் ஹரிச்சந்திரா நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் தற்போதுள்ள நிலையை கேட்டறிந்தார். மேலும், விஜயவாடாவில் உள்ள வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில்குமார் யாதவ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வெள்ள நீர் வடியும் வரை அரசு நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories: