வணிகரீதியான தடை சட்டத்தால் சட்டவிரோதமாக வாடகைத்தாய் முறை தொடரும்: சமூக ஆர்வலர்கள் கருத்து

சென்னை: வணிகரீதியான வாடகை தாய் தடை சட்டத்தால் பல லட்சம் கோடி பணம் புழங்கும் தொழிலை கட்டுப்படுத்த முடியாது என்றும் சட்டவிரோதமாக வாடகைத்தாய் நடைமுறை தொடர வழிவகுக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள்  கூறினார். மத்திய அரசு வணிகரீதியான வாடகை தாய் முறைக்கு தடை விதித்து, விதிகளை உருவாக்கி கடந்த ஆண்டு டிச.19ம் தேதி மக்களவையில் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில்,  மாநிலங்களவையில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பாஜக மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு 2 நாள் முன்னதாக ஆக.5ம் தேதி மக்களவையில் இந்த  மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த சட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக குளோபல் சரோகேட் மதர் அட்வான்சிங் ரைட் டிரஸ்ட் என்று அமைப்பின்  ஹரிஹரன், நிர்வாகிகள் கூறியதாவது: வாடகைத்தாய் முறை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்துவிட்டது.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் அதிக அளவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் மருத்துமவனைகள் வந்துவிட்டன. வாடகைதாய் முறை தொடர்பாக இதுவரை எந்த சட்டமும் நம் நாட்டில் இல்லை, கண்காணிக்க  அரசு அமைப்பு ஏதுமில்லை. இதனால் நம் நாட்டில் எவ்வளவு பேர் வாடகை தாய் உள்ளனர் என்ற தரவுகள் நம்மிடையே இல்லை. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் நல்ல விஷயங்கள், பிரச்னைகள் உள்ளன.

ஒரு பெண் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாடகை தாயாக இருக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. சிலர் இதை ஒரு தொழிலாக செய்வதை இந்த விதி தடை செய்கிறது. வாடகைத்தாயாக இருந்தவருக்கு இன்சூரன்ஸ் அளிக்க  வேண்டும், குழந்தை பிறந்த பின், சிகிச்சைக்கு பணம் அளிக்க வேண்டும் என்றும் மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது. இது வாடகைத்தாயாக இருந்தவரின் நலன் சார்ந்தது. ஏற்கனவே குழந்தை உள்ளவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை  பெறுவதை இந்த சட்டம் தடை செய்கிறது. இதன்மூலம் வசதிபடைத்தவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்துவதை தடுக்கிறது ஆகியவை வரவேற்கக்கூடியது.

இதில் சில பிரச்னைகள், நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்கள் உள்ளன.குழந்தையில்லாத தம்பதியின் உறவினர் மட்டும் வாடகை தாயாக இருக்கலாம் என்று இந்த சட்டம் அனுமதிக்கிறது. வெளிநாட்டவர்கள், என்ஆர்ஐ இந்தியர்கள் நம்  நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளவதை தடை செய்கிறது. அதன்மூலம் வணிக ரீதியான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிப்பதாக அரசு நினைக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உறவினர் வாடகை தாயாக இருக்க முன்வரலாம்.  ஆனால் நம் கலாச்சாரத்துக்கு இந்த நடைமுறை ஒத்துவராது. குழந்தை இல்லாத அக்காவுக்காக திருமணமான எந்த பெண்ணும் குழந்தை பெற்றுத்தர சம்மதிக்கமாட்டார். எதன் அடிப்படையில் இப்படி ஒரு விதியை உருவாக்கினார்கள் என்று  தெரியவில்லை. சட்டத்தை மீறுபவர்களுக்கு 1 லட்சம் அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை. இது சட்டவிரோதமான வணிகரீதியான வாடகைத்தாய் முறைக்கு வழிவகுக்கும். இதனால் வாடகை தாயாக இருக்க சம்மதம் தெரிவித்த ஒரு  பெண்ணை அழைத்துவந்து, உறவினர் என்று சொல்வார்கள்.

அதனால் ஏற்கனவே இருந்த வணிக ரீதியான வாடகைத்தாய் முறை சட்டத்தை மீறி தொடரும்.வெளிநாட்டவரை பொறுத்தவரை அங்கு வாடகை தாய்க்கு 75 லட்சம் செலவாகிறது என்றால் அதில் 5ல் ஒரு பங்கு செலவில் 15 லட்சத்தில்  தமிழகத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.  மெடிக்கல் டூரிசத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. இது பல லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் தொழில். இந்த தொழிலை செய்தவர்கள், தொழிலை  தொடர வேறு வழிகளை தேடுவார்கள். அதனால் இப்படி முற்றிலும் வணிக ரீதியான வாடகை தாய் முறைக்கு தடை விதிப்பது, சட்டவிரோத வாடகை தாய் நடைமுறைக்கே வழிவகுக்கும். வணிக ரீதியான வாடகைத்தாய் முறையை தடை  செய்வதற்கு பதிலாக அதை விதிகளை வகுத்து முறைப்படுத்தலாம். இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும்முன் இதில் உள்ள பிரச்னைக்குரிய விஷயங்களை நீக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: