மெட்ரோ ரயில் தலைமையகத்தில் திடீர் சர்வர் கோளாறு: கணினிகள், தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் முடக்கம் ,..3 மணி நேரம் இலவச பயணத்திற்கு அனுமதி

சென்னை: கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் சர்வர் கோளாறு காரணமாக சென்னையில் நேற்று அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கணினிகள், தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்  செயல்படவில்லை. இதனால், 3 மணிநேரம் இலவச பயணத்திற்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி மெட்ரோ ரயில் சேவை  இயக்கப்பட்டது. இத்துடன் முதல்வழித்தட திட்டம் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால், 32 மெட்ரோ ரயில் நிலையங்களை சேர்த்து நாள்தோறும் 1 லட்சம் பேர் வரையில் மெட்ரோ ரயில் சேவையை  பயன்படுத்தி வருகின்றனர். மாதந்தோறும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வாடிக்கையாகி வருகின்றது. கடந்த மாதம் மட்டும் 4 முறை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால்,  பயணிகள் தரப்பில் இருந்து தொடர் புகார்கள் நிர்வாகத்திற்கு சென்றவண்ணம் உள்ளது.

இந்தநிலையில், நேற்று காலை 5.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சர்வரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அனைத்து நிலையங்களிலும் செயல்பட்டு வந்த  கணினி, தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள், பயணிகள் பயண அட்டையை பயன்படுத்தி உள்ளே நுழையும் தானியங்கி கதவு, ஒலிப்பெருக்கிகள் ஆகிய அனைத்தும் செயல்படாமல் போனது. இதனால், அதிர்ச்சியடைந்த மெட்ரோ ரயில்  ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரச்னையை சரிசெய்ய முடியாததால் அனைத்து மெட்ரோ ரயில்  நிலையங்களிலும் கைப்பட எழுதப்பட்ட பயண ரசீது பயணிகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்த பணியிலும் தாமதம் ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, சர்வர் பிரச்னை சரிசெய்யப்பட்டதால் 10.30 மணிக்கு நிலைமை சீரானது. பின்னர், வழக்கமான நேரத்தில் சேவை இயங்க தொடங்கியது. பராமரிப்பு பணியை சரிவர செய்யாததே இதுபோன்ற தொடர் பிரச்னைகளுக்கு காரணம் என  பயணிகள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: