மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு காற்றில் பறக்கும் பொது இடங்களில் புகைபிடித்தல் தடைச் சட்டம்

* ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரை குடிக்கும் அவலம்

* புகைப்பழக்கம் இல்லாதவர்களும் பலியாகும் பரிதாபம்

வேலூர்: மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கால் பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச் சட்டம் காற்றில் பறக்க விடப்படுவதால், ஆண்டுக்கு 60 லட்சம் பேர் வரை பலியாவதாகவும், அப்பழக்கம் இல்லாமலேயே புகைப்பிடிப்பவர்களால்  6 லட்சம் பேர் வரை பலியாவதாகவும் தெரிய வந்துள்ளது.  புகையிலை, 65 வகையான செடிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் நிகோட்டின் என்ற செடி வகை, புகையிலைக்காக வளர்க்கப்படுகிறது. இந்த நிகோட்டின் செடியின்  இலைகளை உலர்த்தி, மற்ற பொருட்களுடன் சேர்த்து சிகரெட்டுகள், பீடிகள், மூக்குப்பொடி, குட்கா போன்ற போதை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. புகையிலையில் நிகோடின் என்ற தூண்டும் ரசாயனத்துடன், தார், கார்பன் மோனாக்சைடும்  உள்ளது. இதனை வாயில் போட்டு மென்றாலோ, புகைத்தாலோ ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள் வெளியாகிறது. இதனால் புகையிலை பயன்படுத்துவோருக்கு இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள்  ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி புகைப்பதினால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 60 லட்சம் மக்கள் நேரடியாகவும், 6 லட்சம் பேர் அடுத்தவர்கள் புகைப்பதை சுவாசிப்பதாலும் பலியாகி  வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. 2003ல் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. சிகரெட், சுருட்டு, பீடி, குட்கா, பான் மசாலா, மூக்குப்பொடி  போன்ற புகையிலை தொடர்புடைய அனைத்திற்கும் இச்சட்டம் பொருந்தும். ஓட்டல்கள், டீக்கடைகள், டிபன் கடைகள், பணியிடங்கள், வணிக வளாகங்கள்,  திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு  அரங்கங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என்று பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விதமான புகையிலை  பொருட்களையும் விளம்பரம் செய்வதையும், ஊக்குவிப்பதையும், ஆதரிப்பதையும் இச்சட்டம் தடுக்கிறது. புகையிலை பொருட்களை ஒலி, ஒளி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரப்படுத்துவது  தடுக்கப்படுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர ஆதரவு தரக்கூடாது என்று தடைவிதிக்கிறது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடையுடன், கல்வி நிலையங்களுக்கு அருகில் 300 அடி தூரத்திற்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்  தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளது. இச்சட்டத்திற்கு மாறாக பொதுஇடங்களில் பீடி, சிகரெட் பிடிப்பதும், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என்று தடை செய்யப்பட்ட அனைத்து  இடங்களிலும் புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. இதனை கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரை சேர வேண்டியது சேர்ந்து விடுகிறதாம். இதனால்  உலக புகையிலை எதிர்ப்பு தினம் போன்ற நாட்களில் மட்டும் பெயரளவுக்கு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுஇடங்களில் புகைப்படிப்பதற்கான தடைச்சட்டம் காற்றில் பறக்க விடப்படுகிறது.

எனவே, கருவில் வளரும் குழந்தைகள் மட்டுமின்றி புகையிலை பயன்படுத்துவோரால் அந்த பழக்கமில்லாதவர்களும் பாதிக்கப்படும் அளவிற்கு உயிர்க்கொல்லியாக விளங்கும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த, புகையிலை தடை  சட்டத்தை இனியாவது மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: