500 கோடி மோசடி வழக்கு சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மும்பை: ஐஎல் அண்ட் எப்எஸ் நிதி மோசடி வழக்கில், தொழிலதிபர் சிவசங்கரன் உட்பட பலர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். தனது கடனை அடைப்பதற்காக, நிதி நெருக்கடியில் சிக்கிய யுனிடெக் குரூப் ரியல்  எஸ்டேட் நிறுவனத்துக்கு,  ஐஎப்ஐஎன் என்ற நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று தந்ததில்,  ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தில்லுமுல்லு செய்துள்ளதாக ‘தீவிர மோசடி  புலனாய்வு அலுவலகம்(எஸ்.எப்.ஐ.ஓ), மும்பை நீதிமன்றத்தில்  கடந்த ஜூன் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஐஎல் அண்ட் எப்எஸ் என்ற கட்டுமான வளர்ச்சி நிதி நிறுவனத்தின் நிதி மோசடிகளிலும்  தொழிலதிபர் சிவசங்கரனுக்கு தொடர்பு உள்ளதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் மற்றொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஐஎல் அண்ட் எப்எஸ் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடிகளின் விவரம்:

தொழிலதிபர் சிவசங்கரனின், சிவா குரூப்பின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ரூ.494 கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்காக சிவா குரூப் நிறுவனம் ரூ.7.85 கோடி மதிப்பிலான பட்டியலிடப்படாத டாடா டெலி சர்வீசஸ் லிமிடெட் பங்குகளை அடமானம் வைத்துள்ளது. இந்நிலையில், ஐஎப்ஐஎன் நிறுவனம் ரூ.254 கோடி மதிப்பிலான அனைத்து பங்குகளையும் பெற்றுக் கொண்டு, சிவா குழுமத்தின் நிலுவைக் கடன் தொகையை சரி செய்துள்ளது. அதன்பின் சிவா கிரீன் பவர் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.190 கோடியும், சிவா ஷெல்டர் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு ரூ.50 கோடியும் வழங்கியுள்ளது. ஆனால் இந்த கடன் தொகை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு, கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஐஎப்ஐஎன் நிதி நிறுவனம், தனது குழுமத்தில் உள்ள மற்றொரு கம்பெனிக்கு கடன் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஐஎப்ஐஎன் நிதி நிறுவனம் தனது குழுமத்தைச் சேர்ந்த ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு பிற நிறுவனங்கள் மூலமாக ரூ.2,270 கோடி கடனை எந்த அடமானமும் இல்லாமல் வழங்கியதும் கண்டறிப்பட்டுள்ளது. கமிஷன் அடிப்படையில் பிற நிறுவனங்கள் இந்த கடன் தொகையை ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு மாற்றியுள்ளன.

இது குறித்து சங்கம் குரூப் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லாதுலால் சோனி கூறுகையில், ‘‘ஐஎப்ஐஎன் நிறுவனத்தின் ரமேஷ் பாவா, சுபாஷ் சந்திரா ஆகியோர் எங்களை தொடர்பு கொண்டு ரூ.250 கோடி பண பரிமாற்றத்துக்கு கமிஷன் அடிப்படையில் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  இதையடத்து கேஎஸ்ஐஎல் என்ற நிறுவனத்துக்கு ரூ.100 கோடி குறுகிய கால கடனும், எஸ்பிசிஎல் என்ற நிறுவனத்துக்கு ரூ.150 கோடி கடனையும் ஐஎப்ஐஎன் வழங்கியது. அதன்பின் இந்த இரு நிறுவனங்களும் ரூ.250 கோடி கடனை சுசித்ரா பைனான்ஸ் மற்றும் டிரேடிங் என்ற நிறுவனத்துக்கு மாற்றின. இந்நிறுவனம் ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.250 கோடியை கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி மாற்றியது.  நாங்கள் 13 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி, ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு 14 சதவீத வட்டிக்கு வழங்கினோம்’’ என்றார்.

ஐஎப்ஐஎன் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களின் நிதி மோசடிகளில் அதன் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ரவி பார்த்தசாரதி, ஹரி சங்கரன், விபாவ் கபூர் மற்றும் அருண் சாகா, ராம்சந்த் ஆகியோருடன் தொழிலதிபர் சிங்சங்கரன் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். ஐஎல் அண்ட் எப்எஸ்  அதிகாரிகள் தங்கள் நிறுவன ஊழியர்களின் நலநிதியையும், தங்களின் சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியுள்ளதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களின் பங்குகள்  அதன் ஊழியர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அதே பங்குகளை எல்ஐசி நிறுவனத்துக்கு மிக கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு அவர்கள் பங்குகளை வாங்கிய தொகைக்கான பணம் கொடுக்கப்பட்டு, கூடுதலாக விற்கப்பட்ட பணத்தை ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன நிர்வாகிகளே சுருட்டியுள்ளனர். இந்த மோசடிகள் தொடர்பாக ஐஎப்ஐஎன் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிர்வாகிகள் ரவி பார்த்தசாரதி, ரமேஷ் பாவா, அருண் சாகா, ஹரி சங்கரன், ராம்சந்த், ஐஎல் அண்ட் எப்எஸ் நிதி சேவை நிறுவனம் மற்றும் தொழிலதிபர் சிவசங்கரன் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

91,000 கோடி கடனில் ஐ.எல் அண்ட் எப்.எஸ்

ஐஎல் அண்ட் எப்எஸ் என்ற கட்டுமான வளர்ச்சி நிதி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், வங்கிகள் மற்றம் இதர நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ரூ.91 ஆயிரம் கோடி கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் இதன் நிர்வாகிகள் மற்றும் ஆடிட்டர்கள் என தீவிர மோசடி வழக்குககளை விசாரிக்கும் மத்திய அரசு நிறுவனம் எஸ்எப்ஐஓ கூறியுள்ளது.

ஐஎப்ஐஎன் நிதி நிறுவன கடனிலும் மோசடி

ஐஎப்ஐஎன் நிதி நிறுவனத்தின் நிர்வாகி ரவி பாரத்தசாரதியுடன், தொழிலதிபர் சிவசங்கரன் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ‘யுனிடெக் குரூப்’  என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.125 கோடி கடனை  வாங்கி  கொடுத்தார். இந்த நிறுவனம் சிவசங்கரன் நிறுவனத்துக்கு கடன் கொடுக்க  வேண்டியிருந்தது. ஐஎப்ஐஎன்.னிடம் இருந்து வாங்கிய ரூ.125 கோடி கடன்  தொகையில் இருந்து ரூ.80 கோடியை எடுத்து, சிவசங்கரனின் நிறுவனத்துக்கு  கொடுத்து கடனை அடைத்ததாக கணக்கு காட்டியது. சிவசங்கரன் இந்த தொகையை  எடுத்து, ஐஎப்ஐஎன் நிறுவனத்திடம் தனது நிறுவனம் வாங்கிய கடன்களில் சிலவற்றை அடைத்தார். இந்த மோசடி தொடர்பாக எஸ்எப்ஐஓ மும்பை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: