கருணரத்னே - திரிமன்னே ஜோடி அசத்தல் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு

காலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், கேப்டன் கருணரத்னே - திரிமன்னே தொடக்க ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட், சுரங்கா லக்மல் 4 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. டிக்வெல்லா 61, குசால் மெண்டிஸ் 51, ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 5, சாமர்வில்லி 3, போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்திருந்தது. வாட்லிங் 63 ரன், சாமர்வில்லி 5 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். வாட்லிங் 77 ரன் (173 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார்.

Advertising
Advertising

போல்ட் 26 ரன், அஜாஸ் பட்டேல் 14 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 285 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. பொறுப்புடன் விளையாடிய சாமர்வில்லி 40 ரன்னுடன் (118 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்டெனியா 4, தனஞ்ஜெயா  டி சில்வா 3, லாகிரு குமாரா 2, அகிலா தனஞ்ஜெயா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கருணரத்னே 71 ரன் (168 பந்து, 2 பவுண்டரி), திரிமன்னே 57 ரன்னுடன் (132 பந்து, 4 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் இருக்க, இலங்கை வெற்றிக்கு இன்னும் 135 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: