வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது வேலூர், அரக்கோணத்தில் பொதுமக்கள் மறியல்

வேலூர்: வேலூர், அரக்கோணத்தில் வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் புகுந்ததால், கால்வாய்களை தூர்வாரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடியற்காலை வரை கன மழை பெய்தது. இதில் வேலூர் மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை மற்றும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மாங்காய் மண்டி எதிரே உள்ள நிக்கல்சன் கால்வாயை தூர் வாராமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலை மாங்காய் மண்டி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.

இதேபோல், அரக்கோணம் அடுத்த பாப்பான்குளத்தில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் கலந்த மழைநீர் புகுந்ததால் பொருட்கள் சேதமானது. வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறினர். மேலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. எனவே, அங்குள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தி அரக்கோணம்-திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள் வந்து கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபின் மறியலை கைவிட்டனர்.

Related Stories: