விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் : அய்யாக்கண்ணு அறிவிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: கடும் புயல் வெள்ளம், எது வந்தாலும் பாதிப்பது விவசாயம்தான். ஆனால் அரசு எங்களை கண்டு கொள்வதில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட எங்களின் நிலையை கருதி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவுக்கு வெறும்  10 ஆயிரம் கன அடிதான் தண்ணீர் வருகிறது. ஆனால், அதிக தண்ணீர்  வருகிறது என்ற மாயையை உருவாக்கியுள்ளார்கள். காவிரியில் தண்ணீர் வருகின்ற இந்த நேரத்தில் விதை நெல் வாங்க கூட விவசாயிகளிடம்  பணம்

இல்லை.

சிறு, குறு என்று பார்க்காமல் விவசாயி எவராக இருந்தாலும் கூட்டுறவு கடன்களை பாரபட்சம் இல்லாமல் அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால் வருகிற  உள்ளாட்சி தேர்தல், அடுத்து நடக்கின்ற சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஆளுங்கட்சி  மிகப்பெரிய தோல்வியை

சந்திக்கும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், லாபகரமான விலை தரக்கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 8 வழிச்சாலை திட்டம்,  மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை கைவிடகோரியும், சென்னையில் கடலில் இறங்கி சாகும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்ட  வடிவத்தை பற்றி நாளை (இன்று) நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

Related Stories: