கஜா புயலில் வீடிழந்தோருக்கு தர வேண்டிய 600 தார்ப்பாய்களை பள்ளியில் பதுக்கிய விஏஓ : தாசில்தாரிடம் புகார்

ஒரத்தநாடு :  கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு தர வேண்டிய தார்ப்பாய்களை  பள்ளியில் கிராம நிர்வாக அதிகாரி பதுக்கி வைத்துள்ளார். கலெக்டர் ஆய்வுக்கு வருவதை அறிந்ததும் அவற்றை லாரியில் கடத்தி சென்று விட்டார் என்று தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானது. அவர்களுக்கு தற்காலிகமாக கூடாரம் அமைத்துக்கொள்ள தமிழக அரசு இலவசமாக ஒரு தார்ப்பாய் வழங்கியது. இந்த தார்ப்பாய் கஜாபுயலில் வீடு இழந்த பெரும்பாலானவர்களுக்கு சென்று சேரவில்லை. மாறாக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கட்சியினர் பதுக்கிக்கொண்டனர். தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேலையூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சுமார் 600 தார்ப்பாய்கள் கடந்த ஒரு வருடமாக பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. அந்த தார்ப்பாய்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதற்கிடையே அந்த விஏஓ வேறு இடத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்று விட்டார். ஆனாலும் தார்பாய்கள் அதே பள்ளியில் அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி அந்த பள்ளிக்கு கலெக்டர் ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் அறிந்த விஏஓ, 13ம் தேதி பள்ளிக்கு வந்து இரவோடு இரவாக தார்ப்பாய்களை மினி லாரியில் ஏற்றி சென்று விட்டார். விஏஓவுக்கு துணையாக அதிமுக பிரமுகர்கள் சிலரும் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சில தார்ப்பாய்களை இனாமாக கொடுத்து விட்டு மற்றவற்றை கிராம அதிகாரி எடுத்து சென்று விட்டார். இதுகுறித்து ஒக்கநாடு மேலையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கனகவல்லி திருப்பதி கூறும்போது, இந்த பகுதியில் கஜா நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட தார்ப்பாய்கள் பொதுமக்களுக்கு சரியாக விநியோகிக்கப்படவில்லை. இப்போது அந்த தார்ப்பாய்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இடமாறுதலாகி சென்ற கிராம அதிகாரி, புதிதாக வந்த கிராம அதிகாரியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இவர் பதுக்கி வைத்ததன் நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜிடம் பொதுமக்கள் புகார் செய்துள்ளனர்.

Related Stories: