12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

திருச்சி:  12லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும். இதற்காக, அணையில் 100 அடி தண்ணீர் இருக்கவேண்டும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக போதிய நீர் இருப்பு இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. எனினும் தாமதமாக திறப்பட்டு வந்தது. அதேபோல், இந்தாண்டும் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை 112 அடியை எட்டி உள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் எடப்பாடி கடந்த 13ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டார். விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் முக்ெகாம்பு வந்தடைந்த இந்த தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணைக்கு சென்றது. கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி நேற்று அணையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மேளதாளங்கள் முழங்க ஆஞ்சநேயர், விநாயகர், கருப்பண்ண சுவாமி கோயில்களிலும் பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முதலில் காவிரியிலும்(விநாடிக்கு 1000 கனஅடி), அதைத்தொடர்ந்து வெண்ணாற்றிலும்(1000 கனஅடி), 3வதாக கல்லணை கால்வாயிலும்(500 கனஅடி), கடைசியாக கொள்ளிடத்திலும்(விநாடிக்கு 1000 கனஅடி) ஷட்டர்களை இயக்கி தண்ணீரை திறந்து விட்டனர். 4 மதகுகளிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. காவிரியில் விதைநெல் மற்றும் மலர்களை தூவினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கல்லணை திறக்கப்பட்டதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், ஆகிய 5 மாவட்டங்களில் 10 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே நடவு செய்யப்பட்டு வளர்ந்துள்ள 2.5 லட்சம் ஏக்கர் குறுவைக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

ஒகேனக்கல் பார்வையாளர் கோபுரம் சேதம்

கர்நாடக பகுதிகளில் இருந்து, அம்மாநில சுற்றுலாப்பயணிகள் ஒகேனக்கல் ஐந்தருவி அழகை கண்டு ரசிக்க, சுற்றுலாத் துறை மூலம் பாலம் அமைத்திருந்தனர். ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்த 3 லட்சம் கனஅடி நீரில், கர்நாடக பகுதியில் இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக அம்மாநில சுற்றுலா பயணிகள், தமிழக பகுதிகளில் பரந்து விரிந்து ஓடும் காவிரி ஆற்றை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கால், மெயின் அருவிக்கு செல்லும் பாதைகள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கான தடுப்பு கம்பி வேலிகள் மற்றும் தொங்கு பாலத்திற்கு செல்லும் நடை மேடை ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனிடையே, நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால், சேதமான பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று இரவு நிலவரப்படி நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக உள்ளது. எனினும் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும்  10வது நாளாக தடை விதிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்து. நீர்மட்டம் 112.80 அடியாகவும் நீர் இருப்பு 82.45 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: