×

தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சட்டீஸ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. சட்டீஸ்கர் மாநில மக்கள்தொகையில் பட்டியலினத்தவரின் பங்கு 12 விழுக்காட்டிலிருந்து 12.8 சதவீதம் ஆக அதிகரித்து விட்டதால், அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு 12 விழுக்காட்டிலிருந்து 13 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும், பழங்குடியினர் மக்கள்தொகை 32 சதவீதம் ஆக இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான ஒதுக்கீடு நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். 41 சதவீதம் மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கும் உரிய சமூகநீதி வழங்கும் நோக்குடன், இடஒதுக்கீடு 27 சதவீதம் ஆக உயர்த்தப்படுவதாகவும் சட்டீஸ்கர் முதல்வர் அறிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டீஸ்கர் அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன்படி, 10 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதை ஈடுகட்டும் வகையில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்தவும் சட்டீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு உயர்த்தினால் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 100 சதவீதமாக உயரக்கூடும். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு கிடைக்கும். அதுவே உண்மையான சமூகநீதியாக இருக்கும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை. இடஒதுக்கீட்டை அதிகரிக்க  மிகப்பெரிய தடையாக இருந்தது உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50% உச்சவரம்புதான். ஆனால், உயர்சாதி ஏழைகளுக்கு 10%  இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்பு  சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இடஒதுக்கீட்டு உச்சவரம்பு அர்த்தமற்றதாக மாறிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மட்டும்தான் 50 சதவீத்துக்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால்,  இப்போது  மராட்டியத்தில் 78 சதவீதம் சட்டீஸ்கரில் 72 சதவீதம், அரியானாவில் 70 சதவீதம் என பல மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக இந்திய விடுதலைக்கு முன்பாகவே தமிழகத்தில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும் உச்ச நீதிமன்றமே கூறி விட்ட நிலையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்க தடையில்லை. எனவே, தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Increase of reservation ,Tamil Nadu,Ramadas
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்