வரலாறு காணாத வகையில் வேலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

வேலூர்: வேலூரில் வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ. மழை கொட்டியது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நீடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சாரலுடன் தொடங்கிய மழை, நள்ளிரவில் அதிகரித்து, இடி, மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் மழையின் வேகம் கடுமையாகி 5 மணி வரை கொட்டித் தீர்த்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. வேலூர் திடீர் நகர், இந்திரா நகர், கான்சால்பேட்டையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. 5 அடி அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். பல்வேறு பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களில்  வாகனங்கள் சிக்கிக்கொண்டன. வேலூரில் அதிகபட்சமாக 165.7 மி.மீ (17 செ.மீ) மழை கொட்டியது. அடுத்தபடியாக காட்பாடியில் 109 மி.மீ (11 செ.மீ, ஆலங்காயம்- 80.2, அரக்ேகாணம்-46, ஆம்பூர் -40.8 மி.மீ, காவேரிப்பாக்கம்-33.8, வாணியம்பாடி-32 மி.மீ. மழை பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல இடங்களில் மழை பெய்தது. கலசபாக்கம் தாலுகாவில் அதிகபட்சமாக 18.7 செ.மீ மழை பதிவானது. போளூர்- 107 மி.மீ, சேத்துப்பட்டு-74.60 மி.மீ, கீழ்பென்னாத்தூர்-61.60 மி.மீ, திருவண்ணாமலை-48.40 மி.மீ. மழை பதிவானது. கடலூர், விழுப்புரத்தில்: கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தாழ்வான குடிசைப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கடலூரில் 12.5 செ.மீ. மழை பதிவானது.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக கடலூரில் 8 செ.மீ. மழை பதிவானது.

டெல்டாவில்: டெல்டா மாவட்டமான அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கரூர், புதுகை, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரியலூரில் 123.5, திருவாரூரில் 67.6, நாகையில் 29.70, தஞ்சையில் 83, பெரம்பலூரில் 49 மி.மீ. மழை பதிவானது. சம்பா சாகுபடிக்காக கல்லணை திறக்கப்பட்டுள்ள நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

110 ஆண்டுகளுக்கு பிறகு

வேலூரில் கடந்த 1909 ஆகஸ்ட் 8ம் தேதி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 106 மி.மீ  மழை பெய்துள்ளது.  110 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு  முதல் நேற்று அதிகாலை வரை 17 ெச.மீ. மழை கொட்டியதாக  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடு இடிந்து விழுந்து மாணவன் பரிதாப பலி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோயில்  புறையூர் கிராமத்தில் கூலித்தொழிலாளி செல்வமுத்து குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலவீனமாக இருந்த இந்த  வீட்டின் மேல்தளம் மழை காரணமாக இடிந்து விழுந்ததில் செல்லமுத்து மகன் 7ம்  வகுப்பு மாணவன் சிவப்பிரகாசம் (12) இடிபாடுகளில் சிக்கி இறந்தான்.

Related Stories: