தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்வு

* புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது  

* டீ, காபி, பால் பொருட்கள் விலை அதிகரிக்கும்

சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி தமிழக அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வினால் டீ, காபி, பால் பொருட்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர்  பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு வருகிறது. ஆவின் நிறுவனம் மட்டும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, சமன்படுத்தப்பட்டு 200 மி.லி., 500 மி.லி, 1000 மி.லி. அளவு கொண்ட பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உள்ளூர் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 12.71 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது.

தற்போது சில்லறை விலையில் இருநிலை சமன்படுத்திய பால் (மெஜந்தா) ஒரு லிட்டர் ரூ.34, சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் ரூ.37, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் ரூ.41, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் 45க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மெஜந்தா பால் 33, நீலம் பாக்கெட் 34க்கும், பச்சை பால் 39, ஆரஞ்சு பால் ₹43க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த பால் விலை உயர்வு கடந்த  2014ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பால்விலையை லிட்டருக்கு 10 வரை உயர்த்தினார். அதன் பின், சட்டசபையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பால் விலையும் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி  அறிவித்தார். வேலூர் மக்களவை தேர்தலுக்காக பால் விலை உயர்வை அதிமுக அரசு தள்ளி வைத்தது. அதன் பின் இப்ேபாது அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:பசுந்தீவனம், கலப்புத் தீவனம்,  உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது; அதனால்,  பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி  வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில்  கொண்டும்,  நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 உயர்த்தப்படும். இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு 19ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் பால் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து இருநிலை சமன்படுத்திய பால் (மெஜந்தா) ஒரு லிட்டர் 34லிருந்து 40 ஆக விலை உயர்கிறது. அதே ேபால சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் 37லிருந்து 43, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் 41லிருந்து 47, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் 45லிருந்து 51 ஆகவும் விலை உயர்கிறது.

தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் பால் விலை உயர்வு ேமலும் சுமையை ஏற்படுத்தும். எனவே, ஆவின் பால் விலையை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆவின் பால் உயர்வை தொடர்ந்து ஆவின் தயாரிக்கும் பால் பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி மற்றும் இனிப்பு பொருட்களான பால்கோவா, பேரீச்சை பால்கோவா, மைசூர் பா, பால் பேடா, ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளின் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான டீ கடைகளில் ஆவின் பால்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பால் விலை உயர்வால் டீ, காபி விலையையும் உயர்த்த டீக்கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களும் நாளை முதல் டீ, காபி விலையை உயர்த்துவார்கள் என்று கூறப்படுகிறது.

8 ஆண்டில் 22.50 ஏற்றம்

2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் சமன்படுத்திய பால்(நீல நிற கவர்) 20.50ஆக இருந்தது. பின்னர் 2011 நவம்பர் 19ம் தேதி லிட்டர் 27 ஆக உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 2014 நவம்பர் 1ம் தேதி பால் விலையை மேலும் 10 ரூபாய் உயர்த்தி, லிட்டர் 37 ரூபாய்க்கு விற்பனை செய்ய அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 6 உயர்த்தப்பட்டு, லிட்டர் ₹43க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 8 ஆண்டுகளில் 2 மடங்கிற்கு மேல் அதாவது  லிட்டருக்கு  22.50 உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: