போலீஸ் சேனல்: உனக்கு 900, எனக்கு 350, இது காஞ்சி கணக்கு...!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிக்காக கோவை மாநகர காவல்துறையில் இருந்து வாரம்தோறும் 80 முதல் 100 போலீசார் வரை அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு, காவல்துறை சார்பில் ஒரு நாளைக்கு தலா 250 ரூபாய்  பயணப்படி வழங்கப்படுகிறது. சமீபத்தில் காஞ்சிபுரம் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு 5 நாளில் கோவை திரும்பிய சில போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம், ஐந்து நாளைக்கு 1,250 ரூபாய்  பயணப்படி வழங்கப்பட வேண்டும். ஆனால், தலா 900 ரூபாய் மட்டுமே கொடுத்திருக்காங்க.. மீதமுள்ள 350 ரூபாயை சுவாகா... செய்துவிட்டனர். ‘’போன இடத்தில எங்களுக்கு சாப்பாடு, தண்ணீர்கூட கிடைக்கவில்லை. சிறுநீர் கழிக்கவும்  இடமில்லை. ஐந்து நாளில், எங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டதுதான் மிச்சம். மருத்துவ பரிசோதனைக்குக்கூட இந்த பணம் போதாது, அதிலும் இப்படி அமுக்குறாங்களே பாவிங்க...’’ என சாபம் விடுகிறார்கள் கோவை போலீசார். பாதுகாப்பு  பணிக்கு தலைமை தாங்கிச்சென்ற உதவி கமிஷனர்தான் பதில் சொல்லனும் என்கிறார்கள் இவர்கள்...!

போடு பெட்டியில....போலாம் ‘ரைட்’

உடன்குடி அனல் நிலையத்திற்கு கடல் மார்க்கமாக நிலக்கரி கொண்டு வருவதற்காக குலசேகரன்பட்டினம் அருகே பகவத்சிங்புரத்தில் கடலுக்குள் பாலம் (ஜெட்டி) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக ராட்சத பாறாங்கற்கள் லாரிகளில்  மலை போல் குவித்து கொண்டு வரப்படுகிறது. சாத்தான்குளம் பகுதியில் இருந்து தினமும் 100க்கும் அதிகமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மேலே, மேலே கற்களை குவித்துக் கொண்டு வருகின்றனர். இதனால்  திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம் போலீசாருக்கு ‘பண மழை’’ தான் பொழிகிறது. ஓவர் லோடு என லாரியை பிடித்தால் போலீசாருக்கு மாமூல் வெட்டி விடுகின்றனர். ஒரு சில பணம் வாங்காத நேர்மையான அதிகாரிகள்  லாரிகளை ஓவர் லோடு என பிடித்தாலும் அவற்றை எடை போட கொண்டு செல்லக் கூட போலீசார் தயங்குகின்றனராம். சாதாரணமாக சாலையில் டூவீலரில் செல்பவர்களை எல்லாம் மடக்கி லைசென்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என  அபராதம் விதிக்கும் போலீசார் இந்த ஓவர்லோடு மேட்டரில் மட்டும் தாராளமாக இருக்கிறார்களாம். ஓவர் லோடு காரணமாக என்றாவது ஒரு நாள் விபத்து நடந்தால் அதற்கு போலீஸ் தான் முழு பொறுப்பு என்கின்றனர் அப்பகுதி வாசிகள்.

லட்சங்களை பார்த்தால்தான்,

லத்திகள் சுழலும்

குமரி மாவட்ட காவல் துறையில் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் கரன்சி தான் முக்கியம். குறைந்த பட்சம் ₹1 லட்சம் இருந்தால் தான் இன்ஸ்பெக்டர் சிலரையே பார்க்க முடியும். அந்த வகையில் ஓய்வு  பெற்ற போலீஸ்காரர் ஒருவர், தனது மகளை கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் வழக்கு பதிவு  செய்த மகளிர் பெண் போலீஸ் அதிகாரி, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்த போது, இருவரின் பெயரில் அவரது நகையை அடகு வைத்துள்ளனர். பிரச்னை வந்த சமயத்தில் மனைவியின்  கையெழுத்தை போலியாக போட்டு கணவர் நகையை அபகரித்துக் ெகாண்டார். அதற்கான ஆதாரத்தை காட்டியும் பெண் போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் ஏன், இப்படி இழுபறியாக இருக்கிறது என ஓய்வு பெற்ற ஏட்டு  தனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் மூலம் விசாரிக்க, அப்போது தான் லட்சக்கணக்கில் பணம் அள்ளி வீசப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பணத்தை பார்த்ததும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கொடுத்த புகாரையே கிடப்பில் போட்டு விட்டனர்.  என்ன இருந்தாலும் லட்சங்கள் கொடுத்தால் தான் லத்திகள் சுழலும் என கதறியவாறு தனது மகளுடன் வந்து எஸ்.பி.யை பார்த்து மனு கொடுத்து விட்டு போய் இருக்கிறார். வருவாய் துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர்கள், ஏதாவது சான்றிதழ் விஷயமா, அவர்கள் வேலை பார்த்த அலுவலகத்துக்கு போனால், அங்கு இருக்கும் சிலர் உதவி செய்வார்கள். ஆனால் காவல்துறையில் மட்டும் தான், ஓய்வு பெற்ற போலீஸ்காரர் புகார் கொண்டு போனால்  கூட, கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் வேலை நடக்கிறது என்று புலம்பியவாறு சென்றார்.

காசு பாக்குற நேரத்தில் கழற்றி

விட்டுட்டாங்களே: புலம்பும் டிஎஸ்பி

மாங்கனி மாவட்டத்தில் விமான நிலையத்தை தன் வசம் கொண்ட உட்கோட்ட டிஎஸ்பியாக இருந்தவரை, சமீபத்தில் அதிரடியாக மாத்திட்டாங்களாம். அந்த டிஎஸ்பி, தனக்கு தெரிந்தவர்களிடம், காசு பாக்குற நேரத்தில் மாத்திட்டங்களேன்னு  புலம்பி வருகிறாராம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான், கைலாசநாதர் கோயில் உள்ள ஸ்டேஷனில் இருக்கும் தனிப்பிரிவு ஏட்டு, அந்த லிமிட்டில் உள்ள எல்லா சந்து கடை வியாபாரிகளையும் நேரடியாக அழைத்துக் கொண்டு போய் டிஎஸ்பி  முன் நிறுத்தினாராம். அங்கு மாதந்தோறும் எவ்வளவு மாமூல் என்பதை இறுதியாக முடிவு செஞ்சாங்களாம். முடிவுபடி ஒரு மாத மாமூலை கூட முழுசாக வாங்குவதற்கு முன்பே, டிஎஸ்பியை மாத்தினதாலே எல்லாம் போச்சுனு புலம்பல்  வெளியாகியிருக்கு. இருந்தாலும், தனிப்பிரிவு ஏட்டு மட்டும் சரியாக வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்காராம். அவர் மேல் விரைவில் நடவடிக்கை பாயுமுன்னு, மாமூல் கிடைக்காத ஸ்டேஷன் காக்கிகள் பரபரப்பா பேசிக்கிறாங்க.

வலையில் சிக்கும்

அல்வா நகரின் ‘இன்ஸ்’

சைவ சமய ‘குரவர்’ நால்வரில் ஒருவரின் பெயரைக் கொண்ட அதிகாரி, நெல்லை மாநகரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார். அவர் வீட்டிற்கு செல்லும்போது தினமும் பாக்கெட்  நிரம்பியிருக்க வேண்டும். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்காக வெளிமாவட்டத்திற்கு அவர் மாற்றப்பட்டார். தேர்தல் முடிந்த பின்பு நெல்லை மாநகரத்தில் அவர் பணியாற்றிய அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு மீண்டும் வந்து இருக்கையை  பிடித்துக் கொண்டார். இதற்காக அவர் பல ‘ல’’கரங்களை கொடுத்துள்ளாராம். அதை தற்போது அறுவடை செய்து வருகிறாராம். இதனால் அவரிடம் எந்த வழக்கு சென்றாலும் கணிசமாக ஒரு தொகையை கறந்து விடுகிறாராம். இதில் தயவு  தாட்சண்யம் எதுவும் கிடையாதாம். ‘விவேக்’ படத்தில் வருவதுபோல் அதில் ஒரு சிறிய பங்கு கூட அந்த காவலர்களுக்கு தருவதில்லையாம். இதனால் பொறுத்திருந்த போலீசார் இருவர் அவரது கலெக்‌ஷன் குறித்து நைசாக லஞ்ச ஒழிப்பு  துறையிடம் போட்டுக் கொடுத்து விட்டனர். இதையடுத்து அவர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ள சொத்துகள் குறித்தும், அவரை எப்போது அமுக்கலாம் எனவும் போலீசார் கண்காணித்து வருகின்றனராம்.

Related Stories: