×

போலீஸ் சேனல்: மீண்டும் விஜிலென்ஸ் வளையத்தில் சிக்குதாம் மாங்கனி சிட்டி சி.சி.பி.,

மாங்கனி சிட்டியின் மத்திய குற்றப்பிரிவுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லையாம். எந்த பெட்டிஷன் வந்தாலும் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை கன்வின்ஸ் செய்து, கல்லா கட்டுவதில் கில்லாடிகளாம் இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள். இது  தொடர்பான பெட்டிஷன்கள் விஜிலென்ஸ்சுக்கு பறந்து, கண்காணிப்பு தொடர்ந்ததால் கொஞ்ச நாள் அடக்கி வாசித்தார்களாம். தற்போது இரிடியம் மோசடி வழக்கில் இவர்கள் செய்த தகிடு தத்தம், ெரக்ைக கட்டி பறக்குதாம். சிசிபியின் 2  இன்ஸ்பெக்டர்களும் ஆளுக்கொரு கோஷ்டி வச்சிருக்காங்களாம். இதில் சமீபத்தில் இரிடியம் மோசடி புகாரில் சிக்கிய கும்பலை ஒரு கோஷ்டி பிடித்ததாம். பார்ட்டிகளை அரெஸ்ட் ெசய்த போலீசுங்க, அதில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட  ெசாகுசு காரை மட்டும் லாவகமா விட்டுட்டாங்களாம். இதுக்காக ஒரு பெரும் தொகை கைமாறி இருக்காம். இதில் பங்கு கிடைக்காத எதிர் கோஷ்டி இன்ஸ்சின் ஆதரவாளர்கள், விஷயத்தை உயரதிகாரிகளிடம் பத்த வச்சிட்டாங்களாம்.  இதனால் மீண்டும் விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் வரப்போகுது மாங்கனி சிசிபி என்கின்றனர் நேர்மையான காக்கிகள்.

பிழைக்க தெரியாத பசங்க...!
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட 10 காவல் நிலையங்கள் உள்ளன. பிற நகரங்களைப்போல் அல்லாமல் இங்குள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும்  குற்றப்பிரிவுக்கு ஒரே ஆய்வாளர்தான். இந்நகரில், பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து திருட்டு, ெகாள்ளை, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு பஞ்சமே இல்லை. இதுபோன்ற குற்றச்செயல் நடக்கும்போது போலீசார் வழக்கு  மட்டுமே பதிவுசெய்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்வது, களவுபோன பொருட்களை மீட்பது என்பது பெயரளவுக்குக்கூட இல்லை. காரணம், வேலைப்பளு என்கிறார்கள். அந்தந்த காவல் நிலையங்களில் குற்றப்பிரிவுக்கு தனித்தனி  இன்ஸ்பெக்டர்கள் நியமித்தால்தான் எங்களால் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆக முடியும் என்கிறார்கள் இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள். ஆனால், மேலிடத்தில் இருந்து இதற்கான உத்தரவு எதுவும் வரவில்லை. இந்நிலையில், வெளிமாவட்டங்களில்  இருந்து திருப்பூர் மாநகர காவல்துறைக்கு இன்ஸ்பெக்டர்கள் யாரையாவது இடமாற்றம் செய்தால், ஆளவிடுங்கப்பா சாமீ... என ஓட்டம் பிடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், ‘’இரண்டு வசூலையும் சேர்த்து எடுக்கவேண்டியதுதானே...  எதற்கு இப்படி ஓட்டம் பிடிக்கிறாங்க... பிழைக்க தெரியாத பசங்க...’’ என டயலாக் அடிக்கும் இன்ஸ்பெக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உளவுப்பிரிவு எல்லாம் இவங்ககிட்ட தண்ணீ... குடிக்கனும்..!

திருட்டை வேடிக்கை பார்க்கும் போலீஸ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்துள்ளதாம். ஆனால், எந்த திருட்டு சம்பவங்களையும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி  உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லையாம். விசாரணை அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அப்படியே கேட்டுக்கொண்டு அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனராம். இதில் ஒரு சில போலீஸ் அதிகாரிகள் நமக்கு எதுக்கு வம்பு  என ஒதுங்கி கொள்கின்றனர். நகைகள் திருட்டு போனதாக யாராவது ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க வந்தால், அவர்களிடம் புகார் கொடுத்தால் திருட்டு போன நகைகள் கிடைக்காது என போலீசாரை விட்டு அந்தந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள்  பேச வைப்பதோடு புகார்தாரர்களையும் நம்ப வைத்து புகாரை பெறாமலே அனுப்பி வைத்து விடுகின்றனராம்.  புகார் பெற்றால் மாதம், மாதம் எஸ்பி தலைமையில் நடைபெறும் கிரைம் மீட்டிங்கில் திருட்டு புகார் எத்தனை வழக்குகள்  வந்துள்ளது, எத்தனை வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமாம். இந்த விளக்கத்தை தவிர்ப்பதற்காகவே அந்தந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள் புகார் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். திருட்டு  புகார்களை போலீசாரே எடுத்து கொள்ளாததால் புதுகையில் தொடர்ந்து நடை பெறும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனராம்.



Tags : Police Channel
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்