×

நாகராஜா கோயிலில் சிறப்பு ஏற்பாடு: ரூ.300க்கு சிறப்பு தரிசன டிக்கெட்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்திபெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர். கோயிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவர். நாகதோஷ பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்துவது கூடுதல் சிறப்பாகும். நாளை(18ம் தேதி) ஆவணி 1ம் தேதி ஆகும். இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமையிலேயே ஆவணி மாதம் பிறப்பதால் கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை பெருமளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், நாகராஜா கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் ‘க்யூ-செட்’ அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 கட்டணத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இவ்வாறு சிறப்பு தரிசனத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாயாசம் மற்றும் வெற்றிலை, பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். கோயில் மேலாளர் ஆறுமுகதரன் ஏற்பாட்டின் பேரில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கோயில் வளாகத்தில் சுமார் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் முழுமையாக செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags : Nagaraja Temple, special arrangement
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...