×

பொருளாதார மந்தநிலை எதிரொலி; வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு

சென்னை: பொருளாதார மந்தநிலை காரணமாக டி.வி.எஸ் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, மற்றும் வேலை நாட்கள் குறைப்பை அதிகரித்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹுரோ மோட்டார்ஸ், டாடா, மாருதி உள்பட நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. வாகன விற்பனை குறைந்துள்ளதை அடுத்து உற்பத்தியை இந்நிறுவனங்கள் வெகுவாக குறைத்துள்ளன.

இதற்காக தொழிற்சாலைகளில் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள டி.வி.எஸ். லூகாஸ் நிறுவனம் நேற்றும் இன்றும் 3 பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளது. வைபர் உள்ளிட்ட 3 பிரிவுகளை தவிர பிற பிரிவுகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நேற்றும் இன்றும் வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் டி.வி.எஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான சுந்தரம் கிலேடான் நேற்றும், இன்றும் தொழிற்சாலையை மூடியுள்ளது. பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் 4 நாட்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜம்ஷெட்பூர் தொழிற்சாலையை நேற்றும் இன்றும் மூடியுள்ளது.

அடுத்தடுத்து வேலையில்லா நாட்கள் அறிவிப்பும், உற்பத்தி குறைப்பால் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பணி புரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் அரசு உடனடியாக பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : India, recession, TVS, auto companies, working days, workers, unemployment
× RELATED ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு...