மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா: 20ம் தேதி தொடங்குகிறது

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு 10 நாட்கள் நடக்கும் மாசிக்கொடையை அடுத்து ஆவணி மாதம் நடக்கும் அஸ்வதி பொங்கல் வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் அஸ்வதி பொங்கல் வழிபாடு வரும் 20ம் தேதி மகா சுமங்கலி பூஜையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு பஜனை, 6 மணிக்கு மகா சுமங்கலி பூஜை, 2ம் நாள் காலை 6 மணிக்கு தேவி பாராயணம் மற்றும் பஜனை, 9 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, நண்பகல் 11.30 மணிக்கு அசுவதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிடுகின்றனர்.

முதல் பொங்காலை மற்றும் சிறப்பு அன்னதானத்தை தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் துவக்கி வைக்கிறார். எம்.பி.க்கள் விஜயகுமார், வசந்தகுமார், எம்எல்ஏ பிரின்ஸ், ஆவின் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நண்பகல் 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 3ம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 7.30 மணிக்கு பரிசு வழங்கல் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Related Stories: