தக்கலை பஸ் நிலையத்தில் பாய்ந்தோடும் கழிவு நீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

தக்கலை: தக்கலை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி நின்்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான தக்கலை பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையினை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைகின்றனர். பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான இந்த பஸ்நிலையத்தில் வணிக வளாகம் உண்டு. மேலும் கட்டண கழிப்பறை குத்தகைக்கு நகராட்சியால் விடப்பட்டுள்ளது. தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் வந்து செல்கின்றன. பத்மனாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் தக்கலை பஸ் நிலையம் வந்து பின்னர் மாற்று பஸ்களில் செல்கின்றனர்.

இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.  பஸ் நிலையத்தில் இருந்து நகராட்சிக்கு கடைகள் மூலம் வாடகை, பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பஸ் நுழைவு கட்டணம், குத்தகை கட்டணங்கள் என பல லட்சம் வருமானம் கிடைக்கிறது. ஆனால் பயணிகளுக்கு அடிப்டை வசதிகளை செய்து கொடுப்பதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவது பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. பஸ் ஸ்டான்ட் வளாகத்தில் ரயில் பயணிகள் முன் பதிவு நிலையம் ஒன்று செயல்படுகிறது. இதன் அருகில் கட்டண கழிப்பறை உள்ளது. அதனை ஒட்டியே செப்டிக் டேங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த டேங்க் நிறைந்துள்ளதால் கழிவு நீர் கசிந்து தரையில் தேங்கி நிற்கிறது.

இதிலிருந்து அசுத்த வாடை வீசுவதுடன் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பஸ் பயணிகள், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய வருபவர்கள் என அனைவரும் கழிவு நீரை மிதித்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து பயணிகள், அப்பகுதி வியாபாரிகள் கடும் தொல்லைக்கு ஆளாகின்றனர். வருவாயை மட்டுமே பெறும் நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை கண்டு கொள்ளாமல் உள்ளது.

செப்டிக் டேங்கை சுத்தப்படுத்துவது நகராட்சியா? அல்லது குத்தகை தாரரா? என விவாதம் நடத்தி காலத்தை கடத்தி வருகின்றனர். ஆனால் இதன் மூலம் தொற்று நோயை பரப்புகிறோம் என்பதை மறந்து செயல்படுவதாக நகராட்சி மீது சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Stories: