காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரம்; மகள் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!.. பெற்ற தாயே ஒட்டியதால் பரபரப்பு; திசையன்விளை பொதுமக்கள் அதிர்ச்சி

திசையன்விளை: உயிரோடு இருக்கும் கல்லூரி மாணவி இறந்துவிட்டதாக பெற்ற தாயே நோட்டீஸ் அடித்து ஒட்டிய சம்பவம் திசையன்விளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் எல்லாம் காதல் விவகாரம் என தெரியவந்தது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம்:  நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்-அமராவதி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள். பன்னீர்செல்வம் அங்குள்ள மர ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் 4 ஆண்டுக்கு முன் திடீரென்று இறந்தார். 3 மகள்களில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. 2வது மகள் அபி(19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் மற்ற மாணவிகளுடன் தனி வேனில் கல்லூரி சென்று வந்தார். 3வது மகளுக்கு 17 வயதாகிறது. இவர் பள்ளியில் படிக்கிறார்.

இதுபோல் அதே ஊரைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவர் டெம்போவில் கடைகளுக்கு கேன்களில் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் பார்த்தார். இவரது மகன் சந்தோஷ்(21). இந்நிலையில் அபி-சந்தோஷ் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. இருவரும் தூரத்து சொந்தம் என்பதால் இவர்கள் காதல் தெளிந்த நீரோடையாக சென்றது. ஆனால் அபியின் குடும்பத்தினருக்கு சந்தோஷை பிடிக்கவில்லையாம். தாய் அமராவதி மகளை அடிக்கடி கண்டித்தார். நீ அவனுடன் பழகுவதை நிறுத்தாவிட்டால், கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துவிடுவேன் என மகளை மிரட்டியதாக தெரிகிறது. இருப்பினும் அபி-சந்தோஷ் காதலை கைவிடுவதாக இல்லை. எந்த எதிர்ப்பு வந்தாலும் இருவரும் பிரிய முடியாத நிலைக்கு வந்துவிட்டனர்.

இதற்கிடையில் அபியின் வீடு அருகில் வசித்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர், இடையன்குடி சாலையில் பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு சென்றுவிட்டனர். இருப்பினும் காதல் நீடித்தது. அதற்கு எதிர்ப்பும் எகிறியது. இதனால் மனமுடைந்த அபி கடந்த 14ம்தேதி காதலன் சந்தோஷுடன் கம்பி நீட்டிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அபி குடும்பத்தார், ``பெத்தெடுத்து ஆளாக்கிய நம் சொல்லை கேட்காமல் காதலனுடன் ஓடிவிட்டாளே’’ என குமுறினர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை திசையன்விளை பகுதியில், அபி படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இரவோடு இரவாக ஊர் முழுக்க ஒட்டி இருக்கிறார்கள். அந்த போஸ்டர் இன்று காலை நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் என்ன நடந்தது என பேசிக்கொண்டனர்.

தகவலறிந்ததும் திசையன்விளை போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் அபியின் தாய் அமராவதி அங்குள்ள அச்சகத்திற்கு சென்று, கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் போஸ்டர் அடித்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்களும் என்ன விஷயம் என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அமராவதி, என் மகள் திடீரென்று இறந்துவிட்டதால் வெளியூர் மற்றும் உள்ளூர் உறவினர்களுக்கு தெரிவிக்க வாய்ப்பில்லை. இப்படி நோட்டீஸ் அடித்து ஒட்டினால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்று ஒரு கூறி உள்ளார். அவர்களும் அதை உண்மையென நம்பி, நோட்டீஸ் பிரிண்ட் செய்து ஊர் முழுக்க எங்கள் ஆட்களே ஒட்டித்தருவார்கள் என கூறி அதற்கான ஒரு தொகையை வாங்கி கொண்டு அமராவதியை அனுப்பி விட்டனர்.

இன்று காலையில்தான் கல்லூரி மாணவி இறந்ததாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் செய்தியை பார்த்து பொதுமக்கள் குழம்பி போயினர். அமராவதி கணவர் இறந்தபின் வீட்டில் சும்மா இருக்காமல் மகள் படிப்பு செலவிற்கு பணம் தேவைப்படும் என்பதால் ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். மகள் காதலனுடன் சென்றதால் அவர் இறந்துவிட்டதாக தாயே போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: